Breaking News

இலங்கையை தனி சிங்கள நாடாக உருவாக்க முயன்றால் தமிழீழம் உருவாகும் – மாவை எச்சரிக்கை

இலங்கையைத் தனிச் சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால், தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

ஐ.நா விசாரணை அறிக்கை, மற்றும் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் ஆகியன தொடர்பாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமான சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

”இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, கலப்பு நீதிமன்ற முறை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

எனினும், இலங்கை மீதான ஐ.நா தீர்மான வரைவில் முன்னர் இருந்த, அனைத்துலக விசாரணை மற்றும் தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது போன்ற சொற்தொடர்கள் நீக்கப்பட்டுள்ளமை எமக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அனைத்துலக நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஐ.நா.வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இறுதிக்கட்டப் போரில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்துலகம் ஏற்றுக்கொண்டிருப்பது, தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி. உண்மையை வெளிக்கொணர்தல் மற்றும் போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற சட்டமீறல்கள் தொடர்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படுகின்றபோது புதிய விசாரணைப் பொறிமுறை உருவாகும் நிலைமை ஏற்படும் என நாம் நம்புகின்றோம்.

பலர், கலப்பு நீதிமன்றம் என்ற வார்த்தையை தவிர்த்து, உள்ளக விசாரணை என்று கூறுகின்றனர். அதற்கு அரசாங்கமும் உடன்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நம்பக்கூடிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அதன் மீது மக்கள் நம்பிக்கை கொண்டால் மாத்திரமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதுதொடர்பில் பேசமுடியும்.

குற்றம் இழைத்தவர்கள் இந்த நாட்டுக்குள்ளேயே உள்ளனர், பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் இங்கே தான் உள்ளனர். எனவே, சரியான நீதி வழங்கும் பொறிமுறையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கடந்த 2011ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24ஆம் நாள், அமெரிக்கா பேசிய போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையே நடைபெறும் என்று கூறியது.

ஆனால், தற்போது கலப்பு நீதிமன்ற முறைமை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை, அனைத்துலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாமை காரணமாக அனைத்துலக விசாரணை என்பது சாத்தியப்படாத ஒன்றாக மாறியுள்ள நிலையில், கலப்பு நீதிமன்ற விசாரணை முறை, ஆறுதல் தரும் ஒன்றாக அமைந்துள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தி, உரிய தீர்வு காண்பதாக அனைத்துலகத்துக்கு கொடுத்த வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறைவேற்றவில்லை.தமிழர்களின் கலாசாரம், வாழ்விடம் என்பவற்றை அழித்து விட்டால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க தேவையில்லை என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச, அதிகளவான இராணுவத்தை தமிழ் பிரதேசத்தில் குவித்து, தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தி தமிழரின் அடையாளங்களை அழிக்க முயன்றார்.

இதன்காரணமாக, மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். புதிய அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான வழி ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

ஐ.நா.வின் பிரேரணையை நிராகரித்து, தனி சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால் தனித் தமிழீழம் உருவாவதற்கு அது வழிசமைத்து விடும். அதற்கு அனைத்துலக நாடுகளின் அனுமதியை பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.