Breaking News

அமெரிக்காவின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்
இலங்கைப் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணை இன்று மாலை எதிர்ப்புக்கள் இல்லாததால் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மீது பல நாடுகள் தமது கருத்தை வெளியிட்டு உரை நிகழ்த்தின.

அத்துடன், 25 நாடுகள் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்திருந்தன. இந்த நிலையில் எந்தவொரு நாடும் வாக்கெடுப்பைக் கோராததால் வாக்கெடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து சபையில் உரை ஆற்றிய அமெரிக்க பிரதிநிதி, “ஜனவரியில் இருந்து இலங்கையில் நாம் முக்கிய மாற்றங்களை கண்டிருக்கிறோம். இது இன்றைய பிரேரணையை கூட்டு பிரேரணையை சாத்தியமாக்கி இருக்கிறது” என்று கூறினார். 

இதேவேளை, அமெரிக்க தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுவுடன் இணைந்து ஒத்துழைப்பதாகவும் இலங்கையில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புக்கும் இலங்கை அரசு உறுதியளிப்பதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார். 

இதேவேளை குறித்த தலைப்பில் சமர்பிக்கப்பட்ட நான்காவது தீர்மானம் இதுவெனவும் இந்தத் தீர்மானத்திற்கே இலங்கை இணைப் பங்காளராக இணைந்துள்ளதாகவும் இங்கு உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதுவே இலங்கை மற்றும் இந்த ஆணைக்குழுவின் உண்மையான வரலாற்று வளர்ச்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இங்கு உரையாற்றிய இந்தியப் பிரிதிநிதி, “இலங்கை தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வலியுறுத்துறோம். 

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிக்க இந்தியா ஆதரவளிக்கும்” எனத் தெரிவித்தார். பிரதிநிதிகளின் உரைகள் முடிவடைந்த நிலையில் தீர்மான வரைவு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

ஆனால் எந்த நாடும், வாக்கெடுப்பு நடத்தக் கோராத நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக இலங்கை நேரப்படி மாலை 5.15 மணியளவில் அறிவிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரே, இந்தியப் பிரதிநிதி பேரவையில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.