அரசியல் கைதிகளின் விடுதலை! ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து வரும் நிலையில் அவர்களின் நிலைமை
குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கவனத்திற்கு நேற்றைய தினம் கொண்டுவந்திருந்தார்.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக குருமுதல்வர் தெரிவித்தார். அத்துடன் கைதிகளின் விடயம் தொடர்பாக தான் ஏற்கனவே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டவர் இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதால் அவரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் பேராயர் தெரிவித்ததாக குருமுதல்வர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக அநுராதபுரம் மற்றும் மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த குரு முதல்வர் விக்டர் சோசையிடம் தமது விடுதலை தொடர்பில் பேராயரின் கவனத்திற்கு கொண்டுவருமாறு உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.