தீர்வு கிடைக்குமா?
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது பரவலாக ஒலித்து வருகின்றது.
சிறைகளில் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்ற அவர்களுக்கு ஆதரவாக வெளியில் பல இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மனிதாபிமான ரீதியில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் உரத்து எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் என்பன உள்ளூரில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு பல முனைகளிலும் இருந்து நெருக்குதல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளைச் சென்று பார்வையிடாவிட்டால், தங்களைப் பலரும் தவறாக நினைப்பார்கள், என்று அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோர் எண்ணும் அளவுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம் பெற்றிருக்கின்றது. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச தரப்பைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் சிறைச்சாலைகளுக்குப் படையெடுத்துச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், தமது தகுதிக்கேற்ற வகையில் உறுதிமொழியையும் கூறியிருக்கின்றார்கள்.
கொழும்பு மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளிடம் உரையாடிய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார். ஆயினும் அவருடைய உறுதிமொழியை போராட்டம் நடத்தி வருகின்ற கைதிகள் ஏற்கவில்லை.
தங்களுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும். காலக்கெடுவுடன் கூடிய உத்தரவாதத்தை நாட்டின் ஜனாதிபதி நேரடியாகத் தமது வாயினால் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.
நீதி அமைச்சரின் உத்தரவாதத்தின்படி, சட்டமா அதிபர், சொலிசிற்றர் ஜெனரல், நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவொன்று சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களையும், அவர்களுடைய வழக்கு நிலைமைகள் பற்றிய தரவுகளையும் திரட்டி வருகின்றது. இந்த விபரங்கள் தரவுகள் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். அதன் பின்னர், நாட்டுத் தலைவர்களாகிய அவர்கள் இருவரும் நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகளுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் தரங்களுக்கு ஏற்ப எவ்வாறு அவர்களை விடுதலை செய்வது என்பதைத் தீர்மானிப்பார்கள் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றியும், வழக்குத் தாக்கல் செய்யப்படாமலும் பல கைதிகள் சிறைகளில் வாடுகின்றார்கள்.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள கைதிகள் தமது வழக்குகளில் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து தமது விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய வசதிகள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை என பல இடங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் பரவலாக இவர்களுடைய வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இவர்களின் வழக்குத் தவணையின்போது, சம்பந்தப்பட்ட கைதிகளின் குடும்ப உறவினர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கு பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்தக் கைதிகளின் குடும்ப உறவினர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கின்றார்கள். சிங்களப் பகுதிக்குச் சென்று சட்டத்தரணிகளுடனோ அல்லது நீதிமன்ற அதிகாரிகளுடனோ பேசுவதற்கு அவர்களுக்கு மொழி ஒரு பெரும் தடையாக இருக்கின்றது. ஆகவே, அவர்கள் சிங்கள மொழியும், நாட்டின் தென்பகுதிகளாக இருந்தால் அந்தப் பிரதேசத்தையும் அறிந்தவர்களின் உதவியை நாட வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு துணையாக வருபவர்களின் பிரயாணச் செலவு மற்றும் கொடுப்பனவுகளுக்கு அவர்களிடம் வசதியற்ற நிலையே காணப்படுகின்றது. சாதாரணமாக தனியாகச் சென்று வருவதற்குரிய பணவசதியில்லாமல் கஷ்டமடைந்துள்ள இவர்கள் வெளியார் ஒருவரை அழைத்துச் செல்வதை நினைத்தும் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
குடும்பச் செலவுகளுக்காக உழைக்க வேண்டும். பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். ஏனைய குடும்ப நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலதரப்பட்ட பொறுப்புகளுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் மத்தியிலேதான் குடும்பத்தினர் சிறைக்கைதிகளின் நன்மைகளையும், அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
நீண்டகாலம் சிறையில் அடைபட்டிருப்பது, விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளில் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், அடிக்கடி மாறுகின்ற சிறைச்சாலை நிர்வாக நடவடிக்கைகள் செயற்பாடுகள், சிறையதிகாரிகளின் அணுகுமுறைகள், சிறைக்காவலர்களின் நெருக்குதல்கள் என்பவற்றுக்கு மத்தியில் தமது குடும்ப நினைவுச் சுமைகளையும் கவலைகளையும் தாங்க முடியாமல் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் துயரமுற்றிருக்கின்றார்கள்.
இத்தகைய ஒரு நிலையில்தான் தமது விடுதலைக்கான இறுதி மார்க்கமாக அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். போராட்டத்தின் ஊடாக விடுதலை பெற்று வெளியில் செல்வது, இல்லையேல் போராடி மடிவதே மேல் என்ற இறுக்கமான ஒரு தீர்மானத்தில் அவர்கள் இருப்பதை உணர முடிகின்றது.
யுத்தம் முடிவடைவதற்கு முன்பிருந்தே தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். யுத்தம் முடிவடைந்ததும் தங்களுக்குப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை கிடைக்கும் என்று அவர்கள் மிகுந்த ஆவலோடும் இருந்தார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் தங்களை, தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கமாட்டாது வெளியில் சென்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ வழிசெய்யும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் கடந்த ஆறு வருடங்களாக அவர்கள் பல தடவைகளில் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை அரசாங்கத்திடமும், தமது பிரதிநிதிகளாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முன்வைத்திருந்தார்கள்.
இடையிடையே தமது விடுதலையை நினைவூட்டி, அதனை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். அப்போதெல்லாம் சிறை அதிகாரிகளின் கெடுபிடிகள், நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களைச் சென்று சந்தித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் எல்லோருமே, அரசாங்கத்துடன் அவர்களுடைய விடுதலை குறித்து பேச்சுக்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதாக அளித்த உறுதிமொழிகளை ஏற்று தமது போராட்டங்களைக் கைவிட்டிருந்தார்கள்.
ஆயினும் அரசியல்வாதிகள் தமது விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளில் அதிக ஈடுபாடு காட்டிச் செயற்பட்டு வந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புடன் தொடர்புகொண்டு தமது அவல நிலைமைகளை எடுத்துக் கூறி, தமது விடுதலைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்கள். அவரும் ஆன்மிகத் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர்கள், ஜனாதிபதி போன்றோரின் கவனத்திற்கு இவர்களின் பிரச்சினையை எடுத்துக் கூறி அவர்களை விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தியிருந்தார். மொத்தத்தில் அவர்கள் மன்னார் ஆயர் மீது அதிகளவு நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
தற்போது தாங்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, சுகவீனமுற்றுள்ள மன்னார் ஆயருடன் தொடர்பு கொள்ள முடியாததையிட்டு, அவர்கள் பெரிதும் மனமுடைந்திருக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மன்னார் ஆயரின் சார்பில் சென்றிருந்த மன்னார் குருமுதல்வரைக் கண்ட அவர்கள் ஆயர் இல்லாதிருப்பது தங்களுக்கு வலது கை முறிந்தது போன்று இருப்பதாகக் கூறி கவலைப்பட்டிருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடும்போக்குடன் நடந்து கொண்டிருந்தது. இதனால் தமிழ் அரசியல் தலைவர்களினால் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னராவது தமக்கு விடுதலை கிடைக்கும், அவர்கள் விடுதலை பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாமற்றமடைந்ததுதான் மிச்சம்.
நாட்டின் ஆட்சி மாற்றத்தை ஏற்பட்டுள்ள புதிய சூழலில் தமது விடுதலைக்கான முன்னெடுப்புக்களில் தமிழ் அரசியல் தலைவர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்பது தமிழ் அரசியல் கைதிகளின் கவலையாகும். அவர்களில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது என்பதை உணர்ந்ததன் விளைவாகத்தான்போலும், தங்களுடைய விடுதலைக்கான நடவடிக்கைகளை, தாங்களே மேற்கொள்வதற்கான முயற்சிகளில் அவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.
தமது விடுதலையை வலியுறுத்தி தாங்களே நேரடியாக ஜனாதிபதிக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மகஜர்களை அனுப்பினார்கள். பின்னர் தமது குடும்ப உறவினர்களைக் கொண்டு தங்களுடைய விடுதலைக்கான கோரிக்கையை முன்வைத்தார்கள். மகஜர்கள் மூலமான கோரிக்கைகள் கவனிக்கப்படாமற் போனதையடுத்து, 2015 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுவர் தினம் அவர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகத் தோன்றியது.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின வாரத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், தமிழ் அரசியல் கைதிகளாகிய தமது தந்தையரை, தாய்மார்களை, சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி சுலோக அட்டைகளை ஏந்தி நின்று கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். செட்டிகுளம், இரணை இலுப்பைக்குளம், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்தே, தங்களுக்காகத் தாங்களே போராடுவதைவிட வேறு வழியில்லை என்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள். பொதுமன்னிப்பின் கீழ் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் இது தொடர்பில், காலக்கெடுவுடன் கூடியதோர் உத்தரவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்கள்.
இந்தப் போராட்டம் ஐந்து நாட்களாக இடம்பெற்று வருகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால், இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் இருந்து ஓர் உறுதிமொழியைப் பெற முடியவில்லை. நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, புதிய ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு ஜனாதிபதி தேர்தலின் போது, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
ஜனாதிபதி தேர்தலையடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகியுள்ள புதிய அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேர்தல் கால ஆதரவு காரணமாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தெரிவாகியது. அதன் ஊடாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அரசியல் ரீதியாக முன்னைய ஆட்சிக் காலத்திலும் பார்க்க, புதிய ஆட்சியில் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருக்கின்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையில் அரசாங்கத்தை வளைக்க முடியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஜனாதிபதியுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆயினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையில் திருப்தியடையாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். கூட்டமைப்பு நேரடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுக்கள் நடத்தி அவர்களின் ஊடாக தங்களுடைய விடுதலைக்கான ஓர் உத்தரவாதத்தை ஏன் பெற முடியாது, என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
அது மட்டுமல்லாமல், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளைச் சந்தித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோரிடம், கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் குழுவாகச் சென்று ஜனாதிபதியுடன் பேச்சுக்கள் நடத்தி தமது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அல்லது இந்த விடயத்தில் அக்கறையற்றிருக்கும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாராளுமன்றத்திற்கு எதிரில் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பராமுகமாக இருந்திருக்கின்றன என்பதை அரசாங்கம் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றது. புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், நல்லாட்சி நடைபெறுகின்றது என்று கூறப்படுகின்றபோதிலும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் புதிய அரசாங்கமும் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் ஆரம்பித்திருப்பது, நல்லாட்சி நடைபெறுகின்றது என்பதற்கு முரணான தோற்றத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுப்பது புதிய அரசாங்கத்தின் இனவாத நடைமுறையையே வெளிப்படுத்துகின்றது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
ஆனாலும், இனவாதம், மதவாதம் என்ற அடிப்படையில் வன்முறைகள் இடம்பெறுவதற்கோ, அல்லது அத்தகைய தீவிரவாதப் போக்கு ஒன்று கடைப்பிடிப்பற்கோ இடமளிக்கமாட்டோம் என்று உறுதியளித்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது இனவாத கண்ணோட்டத்தில் நோக்கப்படுவது புதிய அரசாங்கத்திற்குப் பெரும் சங்கடமான நிலைமையையே ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவரும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது விடுதலைப்புலி அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் என்ற பிழையான – தீவிரவாத கருத்தொன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே ஆழமாகப் பதிவில் இடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அவர்களை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தால், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சிங்கள தீவிரவாதிகளினதும், இனவாதிகளினதும் கை ஓங்கும். அதனால் அரசியல் ரீதியாக ஒரு கொந்தளிப்பு நிலை ஏற்படும் என்று அரசாங்கத் தரப்பில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. அதன் காரணமாகவே, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதியின் வாய்மொழி வழியாக வெளிப்படுத்துவதற்குக் கூட தயக்கம் காட்டப்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளராக களத்தில் இறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்குத் தயக்கம் காட்டப்பட்டது, அவ்வாறு கூட்டமைப்பு ஆதரவு காட்டுவதாகப் பகிரங்கமாக அறிவித்தால், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவாதிகள் தீவிரவாதிகளை உசுப்பி விட்டதாகி விடும் என்று அஞ்சப்பட்டிருந்தது. இவ்வாறு உசுப்பிவிடுவது என்பது மஹிந்த ராஜபக் ஷவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிப்பதற்குப் பதிலாக வெற்றி யடையச் செய்வதற்கு வழி வகுத்ததாக அமைந்துவிடும் என்று அப்போது கருதப்பட்டது,
அதேபோன்றதொரு கருத்து நிலைப் பாட்டையே தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் எடுத்திருக்கின்றார்கள்.
இருப்பினும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்தியுள்ள அழுத்தமும் நெருக்கடிகளும், இந்தப் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு வழியில் தீர்வு காணப்பட வேண்டும், அதேநேரம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சமாதானப்படுத்தி எந்த வகையிலாவது அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அரச தரப்பினர் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவின் ஊடாக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனுடைய அடுத்தக் கட்ட நிலைப்பாடுகள் மிக விரைவில் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.