புதிய முறையிலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல் - பைசர் முஸ்தபா
எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட உள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பழைய முறையில் நடாத்த சட்டத்தில் இடமில்லை எனவும், இதனால், புதிய முறையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்ட போது எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்பொழுது எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.
எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் எதிர்ப்புக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னரே தேர்தல் நடத்தப்படும். எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்