அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தீர்வு வழங்க வேண்டும்! விஜயகலா வலியுறுத்தல்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வருட இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளபோதிலும் அந்த உறுதிமொழியை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தினார்.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவுடன் நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அங்கு கைதிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே திருமதி விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:-
கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதியொருவரின் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் எனக்கு தெரிவித்துள்ளனர். இதேபோல், பல அரசியல் கைதிகளின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. வருட இறுதிக்குள் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என்று நீதியமைச்சர் கைதிகளிடம் உறுதி கூறியிருந்தார். ஆனாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
சட்டமா அதிபர், சொலிஸிட்டர் ஜெனரல் ஆகியோருடன் நாமும் இணைந்து கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியில் தீர்மானத்தை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் நாம் அழுத்தங்களை மேற்கொள்வோம் என்றார்.