அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் வாக்குறுதியை ஏற்க அரசியல் கைதிகள் மறுப்பு
இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.
இதன் போது, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பகுதி அரசியல் கைதிகள் இந்த வாக்குறுதியை ஏற்க முன்வந்த போதிலும், மற்றொரு பகுதியினர், அதற்கு இணங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு, ஜனாதிபதியிடம் இருந்து நேரடியான வாக்குறுதி தமக்குத் தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று அரசியல் கைதிகளைச் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.