குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்படுவர்! நீதிமன்ற நடவடிக்கை தீவிரம்
விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விரைவில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் குற்றமற்றவர்களை விடுதலை செய்யவும் பாரிய குற்றச்சாட்டு உள்ளவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
இந்த நாட்டில் தற்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவைக்கு இந்த விடயம் தொடர்பில் நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.
இறுதியில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இறுதி தீர்மானம் ஒன்றை எடுத்தது. அதாவது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கின்ற அனைத்து கைதிகளையும் விரைவில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் குற்றமற்றவர்களை விடுதலை செய்யவும் பாரிய குற்றச்சாட்டு உள்ளவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கைதிகள் தொடர்பாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி இதுவரை காலமும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் இருக்கின்றவர்களை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு காணப்படுகின்றவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம்.
கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் அரசாங்கம் இந்த தீர்மானத்தையே எடுத்துள்ளது. இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி- கே.பி. போன்ற புலி உறுப்பினர்கள் சுதந்திரமாக இருக்கும்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை இவ்வளவு காலம் தடுத்து வைப்பது அநீதியல்லவா?
பதில் - ஆம் நிச்சயமாக இது அநீதியாகும். கே.பி. யை நேர்காணல் செய்ய சிங்கள பத்திரிகை ஒன்றின் ஊடகவிலாளர் சென்றுள்ளார். எனினும் இராணுவ வீரர்கள் அதற்கு அனுமதிக்க வில்லையாம்.
கேள்வி- அப்படியானால் மறைப்பதற்கு ஏதேனும் இருக்கின்றதா?
பதில் -அப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது.
கேள்வி - கைதிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ?
பதில் - அரசாங்கத்தின் தீர்மானத்தை அவர்களுக்கு அறிவித்தவுடன் அவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள்.
கேள்வி - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தீர்மானத்தை அறிவித்தும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடவில்லையே?
பதில் - விடுதலை செய்யவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே கைதிகளின் கோரிக்கையாக உள்ளது. எனவே அவர்கள் இதற்கு இணங்குவார்கள் என்று நம்புகின்றோம்.
கேள்வி - இவர்கள் அரசியல் கைதிகளா? அல்லது கைதிகளா?
பதில் - இந்த நாட்டில் தற்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர். எனினும் இவர்கள் விடயத்தில் நீண்டகாலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தான் அந்த செயற்பாட்டை துரிதப்படுத்தவேண்டியுள்ளது.
கேள்வி - சரத் பொன்சேகாவை மன்னிக்க முடியுமாயின் ஏன் இவர்களை மன்னிக்க முடியாது?
பதில் - சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்ற செயற்பாட்டினால் தண்டனை பெறப்பட்டவர். அவர் அரசியல் கைதியல்ல என்றார்.