Breaking News

விசாரணைப் பொறிமுறை குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தில், வரும் 22ஆம் நாள் பிற்பகல் 5 மணியளவில், இந்தக் கூட்டம் நடைபெறும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியுள்ள நிலையில், விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடவே, இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடியே, விசாரணைப் பொறிமுறை குறித்து தீர்மானிக்கப்படும் என்றுஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.