Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்

விடுதலைச் செய்யப்படாமல் நீண்ட நாட்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) யாழ் பல்கலை க்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.


யாழ் பல்கலைக்கழத்தின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உட்பட சகல பிரிவினரும் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் பல்கலைக்கழத்தில் ஒன்றிணைந்த இவர்கள், பல்கலைக்கழகத்தின் உட்புறத்தில் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

இதன்போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இன, மத, ஜாதி என்பவற்றிற்கு அப்பால் எதுவித நிபந்தனையோ, கட்டுப்பாடுகளோ இன்றி விடுதலைச் செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், மக்களின் மனங்களை வென்றுள்ளதுடன், நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவித்து மக்களின் நம்பிக்கையினைக் காப்பற்ற வேண்டும் எனவும், இல்லையேல் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அபிமானத்தை இழந்து விடும் என்றும் கூறினார்.

இதன்போது ‘எம்மினத்தை சிறையில் வைப்பதுதான் நல்லாட்சியா?, தமிழ் அரசியல்வாதிகளே மௌனங்களைக் களையுங்கள், தமிழர்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடு, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது ஒரு உணர்வுபூர்வமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் பல்கலைச் சமூகம், அப்படி அவர்கள் விடுதலைச் செய்யப்படாவிட்டால் தமது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.