அரசாங்கம் வார இறுதிக்குள் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்து
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை குறித்து அரசாங்கம் இந்த வார இறுதிக்குள் தமது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கைதிகள் விடுதலை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பார்வையிடுவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது கைதிகளின் நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டவர் அவர்களின் விடுதலை தொடர்பாக கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
அதன்போது தமது விடுதலை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் எம்.பி. அவர்களின் விடுதலைதொடர்பாக அரசாங்கத்திடம் அழுத்தமளிக்கவுள்ளதாகவும் அவ்வாறு அரசாங்கம் பராமுகமாக தொடர்ந்தும் செயற்படுமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக எடுக்கவேண்டிய தீர்க்கமான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்குமெனவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட சுமந்திரன் எம்.பி. கைதிகளின் விடுதலை தொடர்பாக சாதகமான அறிவிப்புக்களை அரசாங்கம் உடன் அறிவிக்க வேண்டுமென கோரினார். அதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , கைதிகளின் விபரங்களை தான் கோரியுள்ளதாகவும் அவர்களின் விடயங்களை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கைதிகள் தொடர்பாக வழக்குகளின் விபரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரியபோதும் அவை தற்போது வரையில் முழுமையாக தன்னிடம் கையளிக்கப்படவில்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி குறித்த விடயம் தொடர்பாக தான் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கப்படவேண்டும் என்பது குறித்து கூட்டமைப்பு ஒரேநிலைப்பாட்டிலுள்ளதாக பிரதமரிடத்தில் சுமந்திரன் எம்.பி.குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டவர்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் பல தடவைகள் கடந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன்போது அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை எமக்கு அளித்தது. இருப்பினும் அவை எவையுமே நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். தற்போதுவரையில் எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையிலேயே கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது வரையில் அவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவற்றையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இதேநிலைமை தொடருமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு செல்லும். இந்த வார இறுதிக்குள் அரசாங்கம் தெளிவான பதிலொன்றை அளிக்க வேண்டும் என்றார்.