Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று பரவலான போராட்டங்கள்

தமது விடுதலையை வலியுறுத்தி, சிறிலங்காவில் உள்ள 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் 217 அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், நேற்று பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

யாழ்ப்பாணம், முனியப்பர் ஆலய முன்றிலில் நேற்றுக்காலை தொடக்கம் மாலைவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், பெருமளவு அரசியல் கைதிகளின் உறவினர்கள் பங்கேற்றனர். அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


அதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களின் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.


அதேவேளை, கொழும்பில், மகசின் சிறைச்சாலைக்கு முன்பாகவும் அரசியல் கைதிகளின் விடுதலை கோரியும், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.


வவுனியாவிலும், நேற்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்றுக்காலை தொடக்கம் அடையா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், அரசியல் கட்சிகளி்ன் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பி்ரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


கிளிநொச்சியிலும், நேற்று அரசியல் கைதிகளின் உறவினர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.