ஜெனிவா தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு பயனளிக்காது - ஜெயலலிதா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக இருக்காது.
இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 16.9.2015 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்க மத்திய அரசு எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங் கையே போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு உள்ளது என்பதையும் நான் தெளிவாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன்.
எனினும், மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித நேர்மறை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இத்தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ள தீர்மானம்தான் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.