Breaking News

மஹிந்த-ராஜித இரகசிய சந்திப்பு - தகவல்கள் கசிவு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த 10 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015.10.10 ஆம் திகதி தெலிஜ்ஜவிலவிலுள்ள இல. 49 இல் உள்ள “ரணகிரி ஸ்டேட்” எனும் பெயருடைய இடத்தில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் மத போதனையும், அன்னதான நிகழ்வும் இடம்பெற்றுள்ளதாகவும் 12.45 மணியளவில் குறித்த இடத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ சமூகமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூகமளித்து 30 நிமிடங்களின் பின்னர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கு சமூகமளித்துள்ளார். பின்னர் பகல் போசனத்தையடுத்து குறித்த வீட்டின் அறையொன்றுக்குள் இருவரும் 2 மணி நேரம் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.ஜனாதிபதியும் பிரதமரும் அறிந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதா? அல்லது பேச்சுவார்த்தையின் பின்னர் இருவருக்கும் அறிவிப்புச் செய்யப்பட்டதா? என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை.

ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் நிதி மோஷடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் என்பனவற்றிலிருந்து நீங்கிக் கொள்வதற்கான உடன்பாடு காண் பேச்சுவார்த்தையாக (டீல்) இது இருக்கலாம்? என்ற சந்தேகம் அரசியல் மட்டத்தில் முன்வைக்கப்படுகின்றது.