"போர்க்களத்தில் ஒரு பூ' நாளை ஜெனிவாவில்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற ஆவணப்படம் நாளை வியாழக்கிழமை ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.
இறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கு. கணேசன் என்பவரால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜெனிவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.
இசைப்பிரியாவின் பிறப்பு, அவரது இளம் பராயம், மற்றும் அவர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டமை இறுதியில் கொலை செய்யப்பட்டமை போன்ற அனைத்து விடயங்களையும் இந்த ஆவணப்படம் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
எனினும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதன் மூலம் இலங்கை - இந்தியா உறவில் விரிசல் ஏற்படும் என்றும் இசைப்பிரியாக கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதாலும் திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே நாளை போர்க்களத்தில் ஒரு பூ என்ற ஆவணப்படம் ஜெனிவாவில் திரைப்பபடவுள்ளது. இதேவேளை இந்த திரைப்படமானது யுத்தகாலத்தில் இசைப்பிரியா எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதையும் அவரின் வாழ்க்கை வரலாற்றையும் சிறந்த முறையில் சித்தரிப்பதாக அமையும் என்று ஆவணப்படுத்தின் இயக்குர் கு. கணேசன் எம்மிடம் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவற்றை எடுத்துக்காட்டுவதாக ஆவணப்படம் அமையும் என்று அவர் கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு இனத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். அவர் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதையடுத்து சுகவீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.