விசாரணைக்கு கலப்பு நீதிமன்றத்தை ஜே.வி.பி எதிர்க்கிறது
கலப்பு நீதிமன்றம் அமைக்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் அரசியல் அமைப்பிற்கு புறம்பானது எனவும் அவர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரகடனங்களின் அடிப்படையிலும் இவ்வாறு கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் முழு நாடாளுமன்றமும் நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், எனவே எவராலும் அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு பரிந்துரை செய்தமைக்கான காரணம், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நீதிமன்றை கைப்பொம்மையாக பயன்படுத்தியமையேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புதிய அரசாங்கமொன்று ஆட்சியில் இருப்பதனால் இலங்கைக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை குறித்த அறிக்கையில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.