கலப்பு நீதிமன்றமா? இல்லையா? ஜனவரியிலேயே இறுதி தீர்மானம்! என்கிறார் மங்கள
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் பரிந்துரைத்துள்ள விசேட கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை இலங்கைக்கு வரவழைத்து உள்ளக விசாரணையை மேற்கொள்வதா அல்லது உள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதா? என்பது தொடர்பிலும் ஜனவரி மாதமே தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி மாதம் தொடக்கம் 18 மாதங்களில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு முடிவு செய்யப்படும். இதன்போது இராணுவ வீரர்கள் யாராவது குற்றமிழைத்துள்ளமை நிரூபிக்கப்படுமானால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறு உதாரணங்கள் உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
அறிக்கை
அனைவரும் எதிர்பார்த்த்திருந்த இலங்கை குறித்த ஜெனிவா மனித உரிமை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தற்போது அதன் பிரதிகள் அனைத்து உறுப்பு நாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த அறிக்கை இவ்வாறு வருவதற்கான பின்னணியை கூறியாகவேண்டும்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்செய்தபோது பான் கீ மூனும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போக் குற்றங்கள் குறித்து சுயாதீன நம்பகரமான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்
அதே ஆண்டில் இலங்கை ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. அந்த பிரேரணையிலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போக் குற்றங்கள் குறித்து சுயாதீன நம்பகரமான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் அரசியல் தீர்வு தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை சர்வதேச வழங்கிய முன்னைய அரசாங்கம் சர்வதேசத்தையும் உள்நாட்டையும் முழுமையாக ஏமாற்றியது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையில் இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுக்காததன் காரணமாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தவேண்டும் என கோரப்பட்டது. அதற்கு அமைய மூன்று நிபுணர்கள் நியமிக்கப்பட்டு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச விசாரணை கதவுகள் திறக்கப்பட்டன
அதாவது உள்நாட்டில் எம்மால் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினையை சர்வதேசம் வரை கடந்த அரசாங்கமே கொண்டு சென்றது. சர்வதேச விசாரணைக்கான கதவுகளை கடந்த அரசாங்கமே திறந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.
அதன் பின்னர் நான் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றேன். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமை பேரவையின் 29 ஆவது கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த இலஙகை குறித்த விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு கேட்டேன். அதற்கு இணங்க 30 ஆவது கூட்டத் தொடர் வரை அறிக்கை பிற்போடப்பட்டது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளக விசாரணையை நடத்துவதாக கூறியிருந்தோம்.
4 முக்கிய விடயங்களுடன் உள்ளக பொறிமுறை
அதற்காக நான் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் உள்ளக விசாரணை பொறிமுறையை தயாரிப்பதற்காக கட்டமைப்பை உருவாக்க ஒரு விசேட குழுவை நியமித்தேன். அதன்படி தேவையான ஆலோசனைகளை நடத்தியிருந்தோம். அதன்படி அரசாங்கம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை நான்கு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.
முதலாவதாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும். அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது மத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு குழுவும் இயங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இதன்மூலம் நீதியை பெறலாம். தென்னாபிரிக்காவின் ஆலோசனையுடன் இதனை முன்னெடுப்போம்.
இரண்டாவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். மூன்றாவதாக நீதிக்கான உரிமைக்காக நீதிமன்ற பொறிமுறை உருவாக்கப்படும். அடுத்ததாக இழப்பீடு பொறிமுறை உருவாக்கப்படும்.
இறுதியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை போன்ற எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது இருக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இதுதான் நாம் திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறைக் கட்டமைப்பாகும்.
ஜனவரி மாதம் இறுதி தீர்மானம்
ஆனால் இது இறுதி பொறிமுறை அல்ல. இதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் இருந்து கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் நடத்தப்படும். ஜனவரி மாதம் நடுப்பகுதியில் அந்தக் கலந்துரையாடல்கள் முடிவடைந்து இறுதி பொறிமுறை தீர்மானிக்கப்படும்.
கலந்துரையதடல்களில் மத தலைவர்கள் அரசியல்வாதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினதும் ஆலோசனைகள் பெறப்படும். இதன்போது தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கையின் பரிந்துரைகளும் கவனத்திற்கொள்ளப்படும்.
18 மாதங்களில் முடியும்
ஜனவரி மாதம் முதல் 18 மாதங்களில் இந்த உள்ளக விசாரணை பொறிமுறை அமுல்படுத்தி முடிக்கப்படும். இதன்போது சர்வதேச ஆலோசனைகள் தொழில்நுட்ப உதவிகள் பெறப்படும். இதனை சர்வதேசத்தை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது சர்வதேச அழுத்தத்தினாலோ செய்யவில்லை. மாறாக இதுதான் எம்மிடம் காணப்படுகின்ற இறுதி வழிமுறையாக உள்ளது. எனவே அதனை முன்னெடுக்கின்றோம்.
பக்கச்சார்பற்ற அறிக்கை
இதேவேளை ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையானது மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பெயர் விபரங்கள் எதுவும் இல்லை. சம்பவங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. புலிகளின் மீறல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எமது உள்ளக விசாரணை பொறிமுறை ஊடாக இராணுவத்தினரின் இழக்கப்பட்டுள்ள கீர்த்தியை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
இராணுவத்தினரில் யாராவது குற்றம் இழைத்திருந்தால் அதற்கு யார் உயர்மட்டத்திலிருந்து கட்டளையிட்டது என்பதனை தேடிப்பார்ப்போம். அவ்வாறு யாராவது தவறுகள் செய்திருந்தால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறு தண்டனை வழங்கிய உதாரணங்கள் உள்ளன.
உதாரணங்கள்
தெற்கில் ஜே.வி. பி. பிரச்சினையின்போது மனம்பேரி என்ற அழகி கொல்லப்பட்டார் அது தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. கிருஷாந்தி கொலை வழக்கில் சந்திரிகாவின் காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டது. தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஒரு குளத்தில் மிதந்த வரலாறு எம்மிடம் உள்ளது. அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கபட்டது.
குற்றமிழைக்கும் ஒருசில இராணுவ வீரர்களுக்கு தண்டனை அளிப்பதன் மூலம் முழு இராணுவததினதும் புகழை மேலோங்க செய்ய முடியும். ராஜபக்ஷ ஆட்சியின்போது உயர்மட்ட கட்டளைகளினால் இராணுவத்தின் புகழ் இல்லாமல் போனது. இம்முறை ஜெனிவாவில் எமக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்கும். கடந்த ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியிருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும். ஐ.நா. அறிக்கையும் வேறு வடிவில் வந்திருக்கும். கடந்த மார்ச் மாதமே பெயர் விபரங்களுடன் அறிக்கையும் வந்திருக்கும். தற்போதைய நேரத்தில் சர்வதேச விசாரணையும் ஆரம்பமாகியிருக்கும்.
பொருளாதார தடைகள்
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்திருக்கும். அமெரிக்காவுககும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமே எமது நாட்டின் ஏற்றுமதிகள் செல்கின்றன.
கேள்வி -எமது நீதித்துறையில் சர்வதேச நாடுகள் திருப்தியடையுமா?
பதில் -கடந்த ஆட்சிக்காலத்தில் எமது நீதித்துறை காணப்பட்ட விதத்தை பார்க்கும்போது எம்மால் உடை அணிந்துகொண்டு எமது நீதித்துறையை நம்புங்கள் என்று கூற முடியாது. முன்னாள் ஜனாதிபதியின் மகன் எவ்வாறு சட்டக் கல்லூரிக்கான பரீட்சை எழுதினார் என்று அனைவருக்கும் தெரியும். அப்பா எவ்வாறு நீதித்துறையை கையாண்டார் என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்து நீதித்துறையை சுயாதீனமாக்கினோம். ஆனால் 10 வருட விவகாரத்தை ஒரே இரவில் மாற்ற முடியாது. ஆனால் எம்மிடம் சிறந்த நீதிபதிகள் உள்ளனர். அவர்களை வைத்து நாம் உள்ளக விசாரணையை முன்னெடுப்போம்.
கேள்வி - ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளதே-?
பதில்- போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் பரிந்துரைத்துள்ள விசேட கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் தீர்மானிப்போம்.
கேள்வி மேலும் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி எமக்கு சார்பான பிரேரணை ஜெனிவாவில் கொண்டுவரப்படும். அதன்போது எமக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ககின்றோம்.
கேள்வி -18 மாதங்களில் அரசியல் தீர்வு காணப்படுமா?
பதில்- அது நீண்டகால செயற்பாடாக அமையும். அரசியல் தீர்வு காணும் செயற்பாடு நீண்டகாலமானது. எனவே அது நீண்டகாலம் எடுக்கும் செயற்பாடாகும்.
கேள்வி- நம்பிக்கையை எவ்வாறு கட்டியெழுப்புவீர்கள்?
பதில்- இதுதான் மிக முககியமான விடயமாகும். தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும்.
கேள்வி -சர்வதேச நீதிபதிகளை வரைவழைப்பீர்களா?
பதில்- சர்வதேச நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை இலங்கைக்கு வரவழைத்து உள்ளக விசாரணையை மேற்கொள்வதா அல்லது உள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதா? என்பது தொடர்பிலும் ஜனவரி மாதமே தீர்மானம் எடுக்கப்படும். எமது விசாரணை செயற்பாட்டை நாங்கள் எமக்கேற்ற வகையில் முன்னெடுப்போம்.
கேள்வி -இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவார்களா?
பதில்- இராணுவ வீரர்கள் யாராவது குற்றமிழைத்துள்ளமை நிரூபிக்கப்படுமானால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறு உதாரணங்கள் உள்ளன. இதன்மூலம் முழு இராணுவத்தினதும் புகழை பாதுகாக்க முடியும்.
கேள்வி- சர்வதேசத்திடம் எவ்வாறான ஆதரவை பெறுவீர்கள்?
பதில்- தடவியல் மற்றும் தொழில்நுட்ப விடயங்களில் உதவிகளை பெறுவோம். எனினும் அதனையும் ஜனவரி மாதமே தீர்மானிப்போம்.
கேள்வி - சரி கலப்பு நீதிமன்றம் தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டை கூறலாமே?
பதில்- ஐ.நா. வின் பரிந்துரைக்கும் எமது பொறிமுறைககும் பாரிய வித்தியாசங்கள் இல்லை. சில விடயங்கள் குறித்து ஜனவரி மாத இறுதியில் தீர்மானம் எடுப்போம். எமது விடயத்தை நாங்கள் முன்னெடுப்போம்.