Breaking News

கலப்பு விசாரணை விவகாரம்!- துணை ஆவணத்தை வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது.

கம்போடியா விவகாரத்தில் ஐ.நாவின் கலப்பு விசாரணை விவகாரத்தில் பங்கெடுத்திருந்த சட்டவல்லுனர் Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)அவர்களது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் 15 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

கலப்பு விசாரணை நீதிமன்றம் தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் ஓர் தெளிவான சட்ட வரைவு அற்ற நிலையுள்ளது.

அனைத்துலக மட்டத்தில் இதுவரை உருவாகப்பட்ட கலப்பு நீதிமன்றங்கள் எதிர்கொண்ட சவால்களையும் பலவீனங்களையும் ஆய்வு செய்துள்ள இந்த துணை ஆவணம், சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு விசாரணை எத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் என்பது பற்றிய விளங்கங்களோடு பரந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் வலுவாகக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், 1.4 மில்லியன் மக்களது ஒப்பங்களையும் ஐ.நாவிடம் ஒப்படைத்துள்ளது.

இதேவேளை சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு விசாரணைப் பொறிமுறை நடைமுறை சாத்தியமற்றது என்பது பற்றியும் கடந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் உப மாநாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தியிருந்தது.

இந்நிலையில் கலப்பு விசாரணை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணம், சிறிலங்கா தொடர்பிலான கலப்பு விசாரணை நீதிமன்ற வடிவமைப்பு தொடர்பிலான முன்னாய்வுக்கு துணைபுரியும் என்பதோது இந்நீதிமன்றத்தினை அனைத்துலக மயப்படுத்துவதற்கும் வழிசமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.