சுன்னாகம் பகுதியில் திருட்டுக்கள் ரவுடிகளின் அடாவடிகள் அதிகரிப்பு! பொதுமக்கள் விசனம்
சுன்னாகம் பகுதியில் அண்மைக்கால மாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் ரவுடிக் கும்பல்களின் அடாவடிகள் மேலோங்கிக் காணப்படுவதால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிக்குழுக்களின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கிய நிலையில் நீதிமன்றத்தினால் விசேட அதிரடிப் பொலிசாரையும் பயன்படுத்தி அவர்களின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்தும்படி பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓய்ந்து தற்போது குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் பல இலட்சம் பெறுமதியான நகைகள் வீதியால் நடந்து சென்றவர்களிடம் அபகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுன்னாகம் பொலிசாரினால் குற்றச் செயல்களை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதாக கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த சில மணி நேரத்தில் சுன்னாகம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளைஞர்களினால் சுமார் ஏழரை லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளன.
இதில் சுன்னாகம் தெற்கு மூர்தியான் கூடல் பகுதியில் ஒரு தாலிக்கொடியும், சங்கிலியும் மற்றும் கந்தரோடை கற்பொக்கனை பகுதியில் ஒரு தாலிக்கொடி மற்றும் உடுவில் கீழிச்சந்தைப் பகுதியில் ஒரு சங்கிலியென பிற்பகல் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையில் அறுத்து செல்லப்பட்டுள்ளன. குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் பொலிசாருக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விடும் வகையிலேயே அமைந்துள்ளன. எனவே, எமது இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் கள் உடனடியாகவே கைது செய்யப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.