கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு புதியவர் நியமனம்? விமர்சகர்கள் கருத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகி, வேறு ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றமையினால் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பையும் வகிக்க முடியாது என்றும் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு தலைமைப் பதவி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விஸ்தரிக்க வேண்டும் என்றும் சாதாரண கட்சி அரசியிலில் இருந்து விடுபட்டு ஓர் தேசிய இயக்கமாக கூட்டமைப்பு செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வேறு ஒருவருக்கு வழங்குவது சிறப்பான அரசியல் அணுகுமுறை என்றும் எதிர்காலத்தில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்கு தலைமை மாற்றம் சாதாகமாக அமையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சித் தலைமைப் பதவி வடக்கு கிழக்குக்கு மாத்திரமல்ல, ஸ்ரீலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் பொதுவானது என்றும் ஆகவே, சம்பந்தனுடைய அரசியல் செயற்பாடுகளில் பாரிய விரிவுபடுத்தல் தேவைப்படுவதனால் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை இன்னுமொருவருக்கு வழங்குவது ஆரோக்கியமானது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைமைப் பதவியில் இருந்து சம்பந்தன் தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக விரிவாகப் பேச முடியும் என்றும் அந்தப் பதவியைப் பயன்படுத்தி இராஜதந்திரிகளைக்கூட இலகுவாகச் சந்தித்து, விளக்கமளிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அரசியல் விமர்சகர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளவர் சம்பந்தனுக்கு துணையாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றம் தேவை எனக் கருதிய தமிழர்கள், ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அதனைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோன்று, நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றங்களை தமிழ் மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் சமூகத்திற்கான மற்றுமொரு சிறந்த தலைமை உருவாகும் என்றும் அதற்கான தூரநோக்கு சிந்தனையுடன் சம்பந்தன் செயற்பட வேண்டும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அஹிம்சைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து, பல தலைமைப் பதவிகளை வகித்து வந்த சம்பந்தன், தமிழ் சமூகத்துக்கான புதிய தலைமையை தனது வழிகாட்டலின் கீழ் உருவாக்க வேண்டும் என்றும் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.