மகிந்தவாதிகள் தனியான எதிர்க்கட்சியாக செயற்பட தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமானவர்கள் நாடாளுமன்றத்தில் தனியான எதிர்க்கட்சியாக செயல்படத் தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து சபாநாயகரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், சபாநாயகருடன் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் மேல்மாகாண முதலமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், தமது கட்சி குமார வெல்கமையை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கக்கோருவதாக பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ஏற்கனவே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படியே சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றமையை தாம் எதிர்க்கவில்லை. எனினும் அவரின் தலைமையிலான கூட்டமைப்பு, வடமாகாணசபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரியுள்ளமையை பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.