Breaking News

பாக். பகுதியில் இராணுவத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்திரா

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருந்த பகுதியில் இராணுவ தாக்குதல் நடத்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி திட்டமிட்டார் என்று 1981-ம் ஆண்டின் மத்திய உளவு பிரிவு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

மத்திய உளவு பிரிவு (சி.ஐ.ஏ.) 1981-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் திகதி ‘பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சிக்கு இந்தியாவின் பதில்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

12 பக்கங்களை கொண்ட பதிப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் சி.ஐ.ஏ.வின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:- 

1981-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குவித்து வருவது குறித்து கவலை கொண்டது. இஸ்லாமாபாத் நகருக்கு சிறிது தொலைவில் அணு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்பட்டது. அமெரிக்காவும் இதையே கணித்து இருந்தது. 

மிகவும் தீவிரமான நிலையை அடைந்தால், அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இந்தியாவின் கவலை அதிகமானால், பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது இராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கு இது தான் சரியான நேரம் என்று நாங்கள் நம்பினோம். 

அதில் முதல்கட்டமாக பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் குவித்து வைத்திருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பது குறித்து ஒரு திட்டத்தை தயாரித்து வழங்குவது என்று முடிவு செய்தோம். 

ஆனால் இந்திரா காந்தி அதுபோன்ற எந்த முடிவையும் அப்போது எடுக்கவில்லை. அப்போது பாகிஸ்தான் அணு ஆயுதங்களில் பயன்படுத்துவதற்காக புளூட்டோனியம் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த யுரேனியம் தயாரிப்பதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. 

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடியாக, இந்தியா அணு குண்டு சோதனை நடத்துவதற்கு தயாராகும்படி வெளிப்படையாக இந்திரா உத்தரவிட்டார். 1981-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவின் தார் பாலைவனத்தில் இதற்காக குழிதோண்டும் பணிகள் தொடங்கியது. 

குறுகிய கால அறிவிப்பில் தார் பாலைவனத்தில் நிலத்தின் அடியில் அணு குண்டை வெடிக்கச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மே மாதம் 40 டன் அணுகுண்டை வெடிப்பதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றன. பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்திய ஒரு வாரத்திற்கு பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்த திட்டமிட்டிருந்தது. 

பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று இந்தியா ஒரு தெளிவான முடிவுக்கு வந்தது. அது இந்தியாவுக்கு இந்த பிராந்தியத்தில் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ள பெருமையை குறைக்கச்செய்யும். அதனை ‘அமைதிக்கான அணு ஆயுத சோதனை திட்டம்’ மூலம் மீண்டும் புதிதாக தொடங்க முடியும் என்று இந்தியா கருதியது. 

அதனாலேயே பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுக்கவில்லை. ஆனால் மிகவும் மிஞ்சிய நிலைக்கு போனால், அதாவது பாகிஸ்தான் அமெரிக்காவில் இருந்து எப்-16 ரக போர் விமானங்களை அனுகூலமான நேரத்துக்குள் அதிகமாக வாங்கினால், அதுவே இராணுவ தாக்குதல் திட்டம் குறித்து முடிவு எடுக்க சரியான நேரம் என்று பிரதமர் இந்திரா காந்தி கருதியிருந்தார். 

எப்படியானாலும், இந்தியா ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்ற கொள்கையை கடைபிடிப்பதே சரியானது என்பதே எங்களது சிறந்த முடிவு. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.