மகிந்தவின் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக, முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்கு ழுவிற்கு சொந்தமான பணத்தை பயன்படுத்தியமை தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணத்தை பயன்படுத்தி பௌத்த விகாரைகளில் வழங்கப்படும் சில் துணிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதற்காக தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க பணத்தை இவ்வாறு முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்டவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டில் சாட்சியாளர்களாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, முன்னாள் ஜனாதிபதியின் மத விவகார இணைப்புச் செயலாளர் சோமானந்த தேரர் உட்பட 21 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.