ஐ.நா அறிக்கை கண்டு நெகிழ்ந்தோம் ஐயா!
இலங்கையில் நடந்த வன்கொடுமைகள், யுத்த நிட்டூரங்கள், மனித வதைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் நேற்றையதினம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான அறிக்கை நேற்றையதினம் வெளியிடப்பட்டது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசும் படைத் தரப்பும் நடத்திய வன்கொடுமைகள் மிக மோசமானவை என்பது சர்வதேசத்தின் முன் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்கு நடந்த கொடூரங் கள் மறைபட்டுப் போகுமோ என்று அஞ்சியிருந்த வேளையில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவை மிகத் தெளிவாக தமிழ் மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தியது. பொதுமக்களுக்கு எதிரான கொடுமைகளை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அந்தக் குற்றங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் நியாயமானது.
அந்த வகையில் இலங்கை அரசும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கிய படைத்தரப்பும் செய்த நாசகாரங்கள், விடுதலைப்புலிகள் செய்த குற்றங்கள், படைத்தரப்போடு சேர்ந்திருந்த ஆயுதக்குழுக்கள் புரிந்த அடாவடித்தனங்கள் என்பன பட்டவர்த்தன மாக மனித உரிமைகள் ஆணையாளரால் ஜெனி வாவில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இலங்கையின் பேரினவாதிகளுக்குப் பலத்த அடி என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.
இனவாதம் என்ற பெயரால் தமிழ் இனத்தை அழிக்கும் கொடும் செயல் இன்று சர்வதேச அரங்கில் அம்பலமாகியுள்ளது. இது கண்டு இலங்கை ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் பெளத்த பீடங்களும் ஒட்டுமொத்த சிங்கள மக்களும் வெட்கித் தலை குனியவேண்டும்.
இது எங்கள் நாடு எனக் கூறிக் கொண்டு தமிழினத்தை கொன்றொழித்த கொடூரமான செயல்கள்; பாலியல் வன்மங்கள்; ஆட்கடத்தல்கள்; சித்திர வதைகள் என்ற மிக மோசமான அநியாயங்கள்-அக்கிரமங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள் ளன என்ற உண்மையை உலகறியச்செய்ததன் ஊடாக, சர்வதேசத்தின் தீர்ப்பு எங்களை ஆற்றுப்படுத்தும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை ஒன்றுதான் தமிழ் மக்களின் இருப்புக்கான அடித்தளமாகும்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான விசாரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை என்பவற்றின் பின்னணியாக இருந்த அமெரிக்காவையும் அதனோடு சேர்ந்து நீதியை நிலைநாட்டப் பாடுபட்ட நாடுகளையும் தமிழ் மக்கள் கைதொழுதேத்துவர்.
அதேநேரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையை சர்வதேசம் ஆதரித்து அதன்மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் உதவவேண்டும். இதனை அமெரிக்கா முன்னின்று செய்து தரும் என்ற ஒரே நம்பிக்கையோடு தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
-வலம்புரி ஆசிரியர் தலையங்கம்