அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போகவில்லை! நிமால்கா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் நீர்த்துப்போகச் செய்யப்படவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர் நிமால்கா பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையையே வலியுறுத்துவதாகவும் புலம்பெயர் ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் சட்டத்தரணி நிமால்கா பெர்னாண்டோ கூறுகின்றார்.
இலங்கை அரசாங்கம் தான் அமைக்கும் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு பொதுநலவாய நாடுகளினதும், வெளிநாடுகளினதும் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிமால்கா கூறுகின்றார்.
அத்துடன் இந்த வார்த்தைப் பிரயோகம் சர்வதேச விசாரணையை அன்றி வேறு எதனை வலியுறுத்துகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்புக்கின்றார்.
கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் நீதித்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்கள் குறித்து சந்தேகமும், அச்சமும் நிலவிய போதிலும், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தரப்பினர் அவற்றை சுதந்திரமாக செயற்பட அனுமதித்துள்ளதால், நீதியான விசாரணைகள் இடம்பெறும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
அதனாலேயே அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் புதிய ஆட்சியாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியிருப்பதாகவும், இதனை இலங்கை அரசாங்கம் சரிவர பயன்படுத்திக்கொள்ள தவறினால் 18 மாதங்களுக்குப் பின்னர் நடைபெறும் மீளாய்வின் போது இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் என்றும் நிமால்கா பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.