Breaking News

யாழ்ப்பாணத்து ரவுடிகளை அடக்க புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் அட்டகாசம் செய்பவர்களை கட்டுப்படுத்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மதுபோதை மற்றும் ஏனைய பிரச்சனைகளினால் பொதுமக்களிற்கு இடையூறு விளைவிப்பவர்களை கட்டுப்படுத்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் மதுபோதையினால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது, கடந்த 19ம் திகதி யாழ் நகரில் மதுபோதையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் கணவன் மனைவி இருவர் தாக்கப்பட்டிருந்தனர்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டார் மற்றொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார் இருந்த போதிலும் தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது, இவற்றை கட்டுப்படுத்த நாம் புதிய பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அதனடிப்படையில் யாழ் நகரிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள மதுபானசாலைகள் மற்றும் மதுபான விடுதிகளில் நாம் சிவில் பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இவ்வாறு குறித்த இடங்களில் குடிபோதையில் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் இனிவரும் காலங்களில் உடனடியாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்படுவர் என்றார். மேலும் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் எதிர்வரும் 29ம் திகதி புதிய பொலிஸ் காவலரண் ஒன்றையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.

இனிவரும் காலங்களில் 24 மணிநேரமும் அந்த காவலரண் செயற்பாட்டில் இருக்கும், யாழ் நகரிற்குள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த வேளையிலும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த 36 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி குறிப்பட்டுள்ளார்.