உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இருக்க முடியாது! ரணில்
இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை கண்டறிவதே எமது பிரதான குறிக்கோளாகும். இதனை மையமாக வைத்தே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவினையும் கருணை சபையையும் நிறுவவுள்ளோம்.
இதன்மூலமாக உள்ளக பொறிமுறையை கட்டமைத்து இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.உண்மையை கண்டறிவதற்கு அனைவரும் இணக்கம் தெரவித்துள்ளனர். இதன்பிரகாரம் யுத்ததில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு கலதாரி ஹொட்டலில் நேற்று நடைபெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். இந்த ஒற்றுமையினூடாக நல்லாட்சியின் பிரதிபலனை மக்களினால் அடைந்து கொள்ள முடியும்.
இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை கட்டமைக்கவுள்ளோம். இதேவேளை பலமான பாராளுமன்றத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது. முன்னைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் போதியளவு பலமானதாக காணப்படவில்லை. ஆனால் தற்போது நல்லாட்சி வேலைத்திட்டத்தில் பலமான பாராளுமன்றத்தை நாம் கட்டமைக்கவுள்ளோம்.
நாட்டிற்கு தேவையான சட்டத்திட்டங்களை நாம் கொண்டுவரவுள்ளோம். வரவு செலவு திட்ட தயாரிப்பின் பிரதான காரியாலம் பாராளுமன்றமாகும். இதனூடாகவே நாட்டு மக்களின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது. நாட்டு பொருளாதாரம், அரசியல் தொடர்பில் வாத பிரதிவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஜனநாயகத்தின் பிரதான அம்சமான நல்லாட்சியை பூரணமாக ஏற்படுத்த முடியாது. எவ்வாறாயினும் அதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டில் வடக்கு தெற்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக அதிகார பரவலாக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை புதிய தேர்தல் முைறைமை மற்றும் அதிகார பரவலாக்கத்திற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கமைய நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதாயின் உண்மையை கண்டறிந்து மக்கள் மத்தியிலுள்ள சந்தேகங்களை முழுமையாக தீர்க்க வேண்டும்.
இறுதி யுத்ததின் போது என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை கண்டறிவதே எமது பிரதான குறிக்கோளாகும். இதனை மையமாக வைத்தே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவினை நிறுவவுள்ளோம். முன்பு உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களை விடவும் இதன் செயற்பாடுகள் பாரிய மாற்றங்களை கொண்டதாக காணப்படும். அத்தோடு பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்களை உள்ளடக்கிய கருணை சபையொன்றையும் நாம் நிறுவ திட்டமிட்டுள்ளோம்.உண்மையை கண்டறியும் ஆணைக்குழு கருனை சபை என்பவற்றின் ஊடாக உள்ளக பொறிமுறையை கட்டமைத்து நாட்டின் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது.
சர்வதேசத்தின் பரிந்துரையின் பிரகாரம் உள்ளக விசாரணைக்கு சர்வதேச பிரதிநிதிகளை உட்சேர்ப்பதற்கு முடியாது. அதற்கு எமது அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. இதனை அதிகாரமிக்க பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.
எனவே நல்லாட்சி ஏற்படுத்துவது தேசிய அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக அமையும். அனைத்து இனத்தவர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும். நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டும். இதுவே எமக்குள்ள சவாலாகும்.
முன்னைய ஆட்சியில் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு இழைக்கப்பட்ட அநீதி தற்போதைய நிலவரங்களின் போது முழுமையாக மாறியுள்ளது. தற்போது நீதிதுறையை நாம் வலுவானதாக மாற்றியுள்ளோம். இதற்கமைய உள்ளக பொறிமுறையையும் பலமானதாக மாற்றுவோம்.பலமான நீதிதுறை நாம் கட்டியெழுப்பினால் மாத்திரமே நல்லாட்சியை உறுதிப்படுத்த முடியும். என்றார்.