ஐ.நா தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை வரவேற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஒருமனதாக நிறைவேற்றப்படும் இந்த தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
தி ஹிந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய பிரதான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டது. நீதித்துறை செயல்முறையில் கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்கள் இடம்பெறுவது, கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கும்.
உள்ளக நீதிப் பொறிமுறை தொடர்பான சந்தேகம் குறித்து மக்களை குற்றம்சுமத்த முடியாது. கடந்த கால அனுபவங்கள் அந்தளவு மோசமானவையாக இருந்தன. ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய தேவை மற்றும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது. 34அவது அமர்வுகளில் அறிககை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மான வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கத்தக்கவை.
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமானால், இது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் சிறந்த தீர்மானமாக அமையும். ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்படும் சூழலில் இந்த தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது.
நாட்டினதும், ஒட்டுமொத்த மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு, நேர்மையாக இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.அடுத்த ஆண்டுக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அந்த தீர்வு, நியாயமானதாகவும், சாத்தியமானதாகவும், நிலையானதாகவும் அமைய வேண்டும்.
எமது மக்கள், தாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பெருமைப்படத்தக்கதாகவும், இந்த நாடு தம்முடையது என்று உணரத்தக்கதாகவும் அந்த தீர்வு அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.