உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை - சுரேஷ்
மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை நம்பகரமாக அமையும் சாத்தியம் இல்லை. சாட்சிகள் பாதுகாப்பு பிரச்சினை மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சாட்சியமளிக்க முடியாத நிலைமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி. ஆர்.எல். எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசாங்கம் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றிவிட்டு சாட்சிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளக விசாரணையை நடத்த தயாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஜெனிவா வந்துள்ள கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மனித உரிமை பேரவை வளாகத்தில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளகப் பொறிமுறை ஏற்புடையதாக அமையாது என்றும் கலப்பு நீதிமன்றம் அவசியம் என்றும் உள்ளக நீதித்துறை நம்பகரமாக இல்லையென்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் அமெரிக்கப் பிரேரணையனது இலங்கையின் உள்ளக நீதித்துறையின் கட்டமைப்பிற்கு அமைய உள்ளக விசாரணையை நடத்த முடியும் என்றும் தேவையெனில் சர்வதேச மற்றும் பொதுநலவாய உதவிகளை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்கப்படுமானால் அதனூடாக பல சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக உள்ளகப் பொறிமுறையில் சாட்சியமளிக்கும் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற கேள்வி எழுகின்றது. ஏற்கனவே காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த வடக்கு, கிழக்கு மக்களின் சாட்சியங்கள் இராணுவத்தினாலும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலும் அழிக்கப்பட்டிருந்தன.
அவ்வாறான ஆபத்து தொடர்ந்தும் காணப்படுகின்றது. உள்ளகப் பொறிமுறையை முன்னெடுக்கும் பட்சத்தில் இந்த பிரச்சினை மீண்டும் உருவாகும். அதாவது வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றிவிட்டும் சாட்சிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டும் உள்ளக விசாரணை நடத்த அரசாங்கம் தயாரா என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது.
அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு முழுவதும் அமைக்கப்படுமா? இவ்வாறான விடயங்களுக்கு பதிலளித்துவிட்டு இவ்வாறான விடயங்களை உறுதிப்படுத்திவிட்டு உள்ளக விசாரணையை முன்னெடுத்தால் அது நம்பகரமானதாக அமையும் என கூறலாம். ஆனால் தற்போதைய நிலைமையில் இவ்வாறு நம்பகரமாக உள்ளகப் பொறிமுறை இடம் பெறும் சாத்தியமில்லை. மேலும் கடந்த ஐ.நா. மனித உரிமை விசாரணையின்போது வெளிநாடுகளில் வசிக்கும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ளக விசாரணை நடத்தப்படுமானால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அதில் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியங்களை திரட்ட தயாரா? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. எனவேதான் நாம் கூறிய இந்த விடயங்கள் இல்லாத உள்ளகப் பொறிமுறை முன்னேற்றகரமாக அமையாது என்று நாங்கள் கூறுகிறோம்.