உள்ளக விசாரணையொன்று தமிழ்மக்கள் மீது திணிக்கப்படுமானால் அடுத்து என்ன செய்வது?
தமிழ் சிவில் சமூக அமையத்தினால் வவுனியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் இடம்பெற்ற கருத்துரைகள்
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கலப்பு விசாரணை பொறிமுறைக்குப் பதிலாக, இலங்கை அரசு விரும்புகின்ற உள்ளக விசாரணையொன்று தமிழ்மக்கள் மீது திணிக்கப்படுமானால், அடுத்து என்ன செய்வது என்று தமிழ் சிவில் சமூக அமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது.
இந்தக் கலந்துரையாடலில் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்ட மனித உரிமைகள் சட்டத்தரணி புவிதரன், கலப்பு விசாரணை பொறிமுறை என்றால் என்ன என்பது குறித்து நீண்ட விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அருட்தந்தை செல்வரட்னம் அடிகளார் உள்ளக விசாரணையை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு நான்கு காரணங்களை முன்வைத்து அதற்கான நியாயத்தை வலியுறுத்தினார்.
இதனையடுத்து, நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து, கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். அவர்களின் கேள்விகள் சந்தேகங்களுக்கு நிகழ்வின் பேச்சாளர்களும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளரும் விளக்கமளித்தனர்.
இறுதியில் கலந்ரையாடலில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து சிங்கம் தொகுத்து கருத்துரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது:
இதுவரை காலமும் இங்கு நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. விசாரணைகளுக்கு அரசியல்வாதிகள் அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பிழை செய்கின்றார்கள் என்ற பார்வையில் முக்கியமான ஒரு கருத்து இந்தக் கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்சினைகளில், தமிழ் மக்களை சரியான முறையில் அறிவூட்டவில்லையென்று ஊடகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பவற்றின் மீது ஒருபக்கம் இங்கு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சர்வதேச விசாரணை, உள்ளக விசரணை இரண்டுமே சரிவராது என்றும், மறு தரப்பில், சர்வதேச விசாரணைதான் சரிவரும், அதில் நீதி கிடைக்க வேண்டும் என்று பலதரப்பட்ட கோணங்களிலான ஆய்வு கருத்துக்களும் இங்கு முன்வைக்கப்பட்டிருந்தன. இவை எல்லாவற்றையும் மீறி, இலங்கை அரசின் விருப்பத்திற்கமைவாக, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நாளை, உள்ளக விசாரணையைத் திணித்தால், இந்த மக்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது அடுத்த கேள்வி.
இந்த மக்களுக்கு உள்ளக விசாரணையின் ஊடாக கிடைக்கக்கூடிய நீதி என்னவாக இருக்கலாம்? இது அரசியல் பொறிமுறையினூடானதா? அல்லது வெறுமனே நீதி மற்றும் மனிதாபிமானம் சார்ந்ததா? என்ற பலகேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டிருந்தன.
இப்படியான பலதரப்பட்ட ஆரோக்கியமான கருத்துக்களைக் கிண்டிக்கிளறி எமது மக்களிடையே கலந்துரையாட வைக்கவேண்டும் என்பதே, எங்களுடைய முதலாவது நோக்கமாக இருந்தது. இத்தகைய இன்னும் பல விடயங்களுக்கும் வினாக்களுக்கும் விடைகளைத் தேடவேண்டிய தேவை எழுந்துள்ளது.
சர்வதேச விசாரணையை நாங்கள் ஏன் வரவேற்கின்றோம் அல்லது ஏன் கோரி நிற்கின்றோம் என்பதற்கு உள்ளக பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வரலாற்று வழியாக நாங்கள் புரிந்து கொண்டிருக்கின்றோம்.
இந்தக் கலந்துரையாடலில் இறுதியாக இளைஞன் ஒருவன், 'இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு சர்வதேச நாடுகளும் அரசுக்கு உதவியிருந்தன. எனவே, இங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கின்றன. குற்றம் புரிந்தவர்கள் விசாரணை செய்வதில் நம்பிக்கை இல்லையென்றால், உள்ளக விசாரணையும் ஒன்றுதான்; சர்வதேச விசாரணையும் ஒன்றுதான். எனவே அதுவும் வேண்டாம்' என்று கூறினான். அந்தக் கூற்றிலும் நியாயம் இல்லாமலில்லை.
இங்கே ஒரு கொடிய போர் நடந்தபோது அனைத்து சர்வதேச நாடுகளும் அதைப்பார்த்துக்கொண்டு அங்கீகரித்துக்கொண்டுதான் இருந்தன என்பதைப் பலர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்கள். இருந்தபோதிலும், எச்சசொச்சமாக இருக்கின்ற ஜனநாயக அடையாளங்கள் சிலவேளைகளில் சர்வதேச ரீதியில் நிறைவேற்றப்படுமா என்ற ஒரு நப்பாசை இங்கு எழுந்து நிற்கிறது.
விசாரணைகளில், அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம் என்று நிராகரிப்பது எங்களுக்கு இலகுவாக இருக்கலாம். அது எப்படி ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் எங்களிடம் விடை இல்லை.
ஆனால், நாங்கள் ஏன் உள்ளகப் பொறிமுறையை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம் என்பதற்கு எங்களிடம் வலுவான காரணங்கள் பல இருக்கின்றன. சர்வதேசத்தில் ஆயுதம் வழங்கிய அல்லது பல பொறிமுறைகளை வழங்கிய நாடுகள்தான் இன்று இந்த சர்வ தேச விசாரணைக்குப் பின்னால் நின்று பாட்டுப்பாடுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டும் எங்களுக்கு ஐ.நா. சபையில் நீதி கிடைப்பதற்கு அப்பால், அப்படியான ஒரு விசாரணையின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையில் எங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் இழப்புக்களையும் பதிவுசெய்ய முடியுமா? என்ற கேள்வி இங்கு முக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றது.
எங்களுடைய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சர்வதேச ரீதியில் பதியப்படலாம் என்பதற்காக இந்த நீதியை நாங்கள் கோருவதாக இருக்கலாம். இது ஒன்றுதான் எங்களுக்கு தற்போது தெரிகின்ற விடயமாக இருக்கின்றது.
மிக முக்கியமாக இங்கு ஒரு விடயம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. உள்ளக விசாரணைதான் வருகின்றது அப்பொழுது நீங்கள் மக்களை எப்படி வழி நடத்தப் போகின்றீர்கள்? மக்கள் போய் பேச வேண்டுமா? அப்படிப்பேசினால் மக்களுக்கு நீதி கிடைக்குமா? மக்களுடைய வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படுமா என்றெல்லாம் வினவப்பட்டிருந்தன.
இது குறித்து, நாங்கள் எல்லோரும் அவசரமாகக் கூடி பேச வேண்டிய அவசியம இப்போது எழுந்துள்ளது என்பதே யதார்த்தம். இது இன்றைய காலத்தின் கட்டாய கடமை. பாதிப்புக்குள்ளான மக்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், தமிழ் மக்களிடையே இருக்கின்ற பலரும் இணைந்து பேச்சுக்கள் நடத்தி, விவாதித்து ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டியுள்ளது, அதனைச் செய்வதற்கு தமிழ் சிவில் சமூக அமையம் தயாராக இருக்கின்றது. அதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும். அதற்காக அது மற்றவர்களுடன் இணைந்தும் செயற்படும். எனவே உள்ளக விசாரணை என்ற ஒரு பொறிமுறை தமிழ் மக்களின் தலையில் கட்டப்படுவதற்கு முன்னதாகவே நாம் எல்லோரும் கூடி, பேசி, முடிவெடுக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் நடந்த உள்ளக விசாரணைக்கு, நாங்கள் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற வகையில், இரண்டு கட்டங்களில் எங்களுடைய பதிலை, வடக்கு-கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களிலும் பாதிப்புக்குள்ளான மக்களுடன் கலந்துரையாடி அரசாங்கத்திற்கு அளித்திருக்கின்றோம்.
இதன் அடிப்படையில், இலங்கையில் உருவாக்கப்பட்ட விசாரணை குழுக்களில் நம்பிக்கையில்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களே விசாரணையாளர்களிடம்போய் நேரடியாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் விசாரணைகள் பயனற்றவை என்பதை அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல, அதற்கும் அப்பால், அந்த விசாரணைக்குழுக்களிலே தங்களுடைய சாட்சியங்களைப் பதிவு செய்ய விரும்பியவர்களுக்கான உரிமையையும் நாங்கள் மறுக்கவில்லை. அதனையும் நாங்கள் உறுதிப்படுத்தியிருந்தோம். அவ்வாறு அவர்கள் அதனைச் செய்வதன் ஊடாக, அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்திருக்கவில்லை.
எனவே இன்றைய சூழலில் ஐ.நா. விசாரணை தொடர்பில்; எதிர்வரும் நாட்களில் காத்திரமான பல கலந்துரையாடல்களை நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பது இன்றைய கலந்துரையாடலின் விளைவாக இருக்கின்றது.
தமிழ் சிவில் சமூக அமையமானது, 2010 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை தன்னுடைய இயலுமையின்பால் செயற்பட்டு வருகின்றது. அது காத்திரமாக செயற்பட இன்னும் இடமிருக்கின்றது. தமிழ் சிவில் சமூக அமையத்தினரிடம் நிறைய பலவீனம் இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே, சிவில் சமூக அமையத்தைப் பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர் தரப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதற்காக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளர் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை தமிழ் அரசியல் தலைமைகளுடன் நாங்கள் செய்தோம். ஆனால் அது வெற்றிபெறவில்லை. அதற்கு குறுகிய அரசியல் நோக்கங்களே காரணம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஐ.நா. அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்டதும், இலங்கை அரச பேச்சாளர் அதனை நிராகரித்த உடனே, தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துகின்ற அனைத்துக் கட்சிகளுடனும் தொடர்புகொண்டு இதற்கு நாங்கள் ஒட்டுமொத்தமாக பதிலளிக்க வேண்டும் என்று ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தோம். ஆனால் எல்லோ ருமே அதற்குச் சாதகமான பதிலைத் தர வில்லை. மாறாக, அவரவர்களுக்கான நியாய பிரதிவாதங்களுடன் அவர்கள் இருந்து கொண்டார்கள்.
எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களுக்கும் மீறப்பட்டுள்ள மனித உரிமை களுக்கும் எதிராக நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கத் தவறினால், குரல் கொடுக்காமல், அமைதியாக இருந்தால், நாங்கள் இந்த உள்ளக விசாரணையை ஏற்றுக்கொண்டவர்களாகிவிடுவோம். இதுவொரு ஆபத்தான அரசியல் சதி என்பதை அனைவரும் இன்றைய கால கட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு குரல் கொடுக்கும் விடயத்தில், தமிழ் சிவில் சமூக அமையம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல. இதனை சகலரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த அமையம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்தியம்புவதற்கும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நீதி கோருவதற்குமான – மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும்.