Breaking News

போர்க்குற்ற விசாரணை குறித்த கனடாவின் நிலைப்பாடு – அறிக்கையைப் பொறுத்தே தீர்மானம்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வர உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்று, அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஒட்டாவாவில் உள்ள கனேடிய அரசாங்க பேச்சாளர் ஒருவர், “இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைகள் கடப்பாடுகள் விடயத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கனடா கவனமாக ஆராயும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக, பேரவை அமர்வுகளில் முன்வைக்கப்படும் தீர்மான வரைவை ஆராய்ந்த பின்னர் முடிவெடுப்பதே கனடாவின் வழக்கம்.

நாம் இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான, பொறுப்பான, பன்முக அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்கிறோம். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் இணைந்து செயற்படவும், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கைக்கு ஊக்கமளிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமை கொண்ட 47 உறுப்பு நாடுகளில் கனடா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.