வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிகளும், 40 சிவில் சமூக அமைப்புகளும், நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் வலுவானதாக தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளன.
ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளடங்கலாக 40 அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
“சிறிலங்காவில் இடம்பெற்ற மோதல்களால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அனைத்துலக குற்றவியல் விசாரணைகள் மூலமே நீதியை அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது உறுதியான நம்பிக்கை.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேனின் பணியகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மான வரைவில், சிறப்பு கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் நீக்கப்பட்டிருப்பதுடன், கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டாலும் அதனை உறுதியாக வலியுறுத்தியிருக்கவில்லை.
உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அமர்த்துவதென்பது உள்ளக சட்ட அமைப்புக்குப் பொருத்தமானதாக அமையாது.
அது மாத்திரமன்றி, சிறிலங்காவால் பாரியளவில் கட்டுப்படுத்தப்படும், முகாமைத்துவம் செய்யும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமானதாக இருக்கப் போவதில்லை.அதேவேளை விசாரணை அறிக்கையில் வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னங்களைக் குறைப்பது தொடர்பான பரிந்துரை, தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தீர்மான வரைவில் நீக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி விசாரணைகளின் போது சாட்சியமளிப்பவர்களில் உள்ளூரில் உள்ளவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றே பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ளது.சிறிலங்காவுக்கு வெளியே இருந்து சாட்சியங்கள் வழங்கியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
இவ்வாறான நிலையில் சிறிலங்காவின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது என்ற உண்மையான நிலைப்பாட்டின் கீழ் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதாயின் அதற்கேற்றவாறான தீர்மான வரைவை முன்வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.