அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் மைத்திரி சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்க, நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு பக்க நிகழ்வாக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் தனியான சந்திப்புகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று அவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகரும் கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து இந்தச் சந்திப்பில், முக்கியமாக பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.