Breaking News

ரமபோசா இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை -மறுக்கிறது இலங்கை

தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் ரமபோசா, இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

‘தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் ரமபோசா இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு, தேசியப் பிரச்சினை தீர்வு தொடர்பாக நடுநிலை வகிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை.

கடந்த 25ஆம் நாளும், அதற்கு முன்னரும் இலங்கை  ஊடாக சிறில் ரமபோசா பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் ஜப்பான் செல்லும் போதும், திரும்பிச் செல்லும் போதும், அவர் பயணம் செய்த விமானம் கட் டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது. இவ்வாறு விமானம் தரையிறங்கிய போது தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைத்தங்கிச் சென்றார்.

வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் எமது விமான நிலையத்தில் இடைத்தங்கிச் செல்லும் போது வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் வெளிநாட்டுத் தலைவரை சந்திப்பது இராஜதந்திர வழக்கம். இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றதே தவிர தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி இலங்கை வரவில்லை” என்று தெரிவித்தார்.

அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், சிறில் ரமபோசா தங்கியிருந்த போது, மனித உரிமைகள் சட்டத்தரணி ரட்ணவேல், அவரைச் சென்று சந்தித்துப் பேசியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.