ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை மீன்களை இறக்குமதிசெய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு அதன் விசேட குழு அடுத்த மாதம் 5 ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விதிக்கப்பட்டது. தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அத்தடையை நீக்குவதற்கான சாதகமான நிலைமைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தை கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கை மீனவர் படகுகளை கண்காணிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சராக திலிப் வெத ஆராச்சி நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் நிலைகொண்டிருந்த ராஜபக் ஷ குடும்ப ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது நாட்டின் நல்லாட்சி, ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று ஜரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி இறக்குமதித் தடையை மீளப்பெறுவதற்கு சர்வதேச ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தற்போது சாதகமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முயற்சியினால் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு அடுத்த மாதம் 5 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளது.இதன்பின்னர் இலங்கையின் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்படும்.அத்தோடு இலங்கை மீனவர் படகுகளை கண்காணிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சியின் போது மீனவர் களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை போன்று பாரிய சலுகை வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நான் எதிர் பார்த்துள்ளேன் என்றார்.