தேசிய அரசாங்கத்துடன் தமிழ் தலைமைகள் கைகோர்க்க வேண்டும் - சம்பிக்க கோரிக்கை
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தை நம்பியிருக்காது, அமையவிருக்கும் தேசிய அரசாங் கத்துடன் தமிழ் தலைமைகளும் கைகோர்க்க வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஆட்சிமாற்றத்தின் மூலமாக புலிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம் என ஒருசிலர் காணும் கனவை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் தேசிய பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படும் என ஊடகவிளலாவினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றமானது ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. அதேபோல் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை குறைந்துள்ளது. எனினும் இன்னும் சில தினங்களில் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வெளியிடவுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை மீதான பிரேரணையை தோற்கடிக்க அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த கால ஆட்சித் திட்டத்தை கருத்தில் வைத்துக்கொண்டு இலங்கையை பழிவாங்கிவிடக் கூடாது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரசாங்கத்துடன் பகைத்துக்கொண்டு செயற்பட்டனர். அதேபோல் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிரான பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் எந்தவொரு தனி இனத்தை சார்ந்ததாகவோ அல்லது யாரையும் காப்பாற்றுவதாகவோ அமையாது முழு நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அமைந்தது. இந்த மாற்றத்தில் பிரதானமாக தமிழ் தலைமைகளும் மக்களும் பங்கு கொண்டனர்.
அதேபோல் இப்போதும் உருவாகியிருக்கும் அரசாங்கமானது குடும்ப நலனை கவனத்தில் கொண்டோ அல்லது யாரையும் பழிவாங்க வேண்டும் என்றோ அமையவில்லை. இந்த அரசாங்கம் தனித்த ஒரு இன மக்களை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தவுமில்லை. நடைபெற்று முடிவடைந்துள்ள பொதுத் தேர்தலில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் என அனைவரும் எமக்கு வாக்களித்துள்ளனர். அனைத்து பகுதிகளில் வாழும் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர். ஆகவே இந்த மாற்றம் நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆகவே நாட்டை ஒன்றிணைந்த பாதையில் கொண்டு செல்வதாயின், நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்த வேண்டுமாயின் இப்போது அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் தமிழ் பிரதிநிதிகளும் பங்கு கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் நலன்களை இந்த அரசாங்கத்தில் இணைந்து பெற்றுக்கொடுக்க வேண்டும். மாறாக சர்வதேசத்தை தொடர்ந்தும் நம்பியிருப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமானது சர்வதேசத்தை முழுமையாக திருப்திப் படுத்தியுள்ளது. இலங்கை மீது புதிய நம்பிக்கை உருவாக்கியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் பலப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை சர்வதேச நாடுகளுக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதுவே எமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்.
யுத்த குற்றச்சாட்டுகளை மாத்திரம் முன்வைத்துக்கொண்டு இலங்கையை தண்டிக்க பலர் முயற்சித்தனர். அதேபோல் நாடு கடந்த விடுதலைப்புலிகள் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் புலிகள் என பலர் இலங்கையை பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சர்வதேச நாடுகள் இப்போது தமது முடிவுகளை மாற்றிக்கொண்ட போதிலும் புலம்பெயர் புலிகள் அமைப்புகள் இன்றும் தமது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகின்றன.
ஆகவே அவற்றில் இருந்தும் நாட்டை காப்பாற்ற வேண்டும். ஆட்சி மாற்றதின் மூலமாக மீண்டும் நாட்டில் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என எவரேனும் நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது. எனவே நல்லாட்சியில் தமிழ்,சிங்கள பிரதிநிதித்துவம் அமையவேண்டும் என்றார்.