சர்வதேச விசாரணை தேவை : மோடிக்கு ஜெயா கடிதம்
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறுப்படுகின்ற போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நடவடிக்கை தேவை என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவையென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக தீர்மானம் ஒன்று நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் முதலமைச்சர் இணைத்து அனுப்பியுள்ளார்.
குறிப்பாக சர்வதேச விசாரணை கோரி ஐ.நா மனித உரிமைக்குழு முன்பாக தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்தியா சார்பில் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.