காணாமல் போனவர்களுக்காக விசேட சான்றிதழ் வழங்க அமைச்சரவை தீர்மானம்!
காணாமல் போனவர்களுக்காக விசேட சான்றிதழ் ஒன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளத் தவறும் உறவினர்களுக்கு இவ்வாறு விசேட சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
1951ஆம் ஆண்டு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டங்களின் அடிப்படையில், ஆட்பதிவு திணைக்களத்திற்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறான வகையிலான மரணங்களுக்கு உள்ளானவர்களுக்கு இவ்வாறு விசேட சான்றிதழ் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகள், இயற்கைக்கு மாறான வகையிலான உயிரிழப்புக்கள், சடலங்களை கண்டு பிடிக்க முடியாத சந்தர்ப்பங்கள் போன்ற நேரங்களில் இந்த விசேட சான்றிதழ் வழங்கப்படாது.
எவ்வாறெனினும், இறப்பு சான்றிதழ்கள் அன்றி விசேட சான்றிதழ்களை வழங்க இந்த சட்டங்களில் இடமில்லை என்ற காரணத்தினால், 2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்பு (தற்காலிக சட்டம்) சட்டத்தின் அடிப்படையில் விசேட சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
உறவினர்கள் குறித்த நபர் உயிரிழந்ததாக ஏற்றுக்கொள்ளத் தவறினால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட முடியாது.காணாமல் போனவர்கள், காணவில்லை என விசேட சான்றிதழ் ஒன்றை வழங்க உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன முன்வைத்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.