தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை! பங்காளிக் கட்சிகள் அதிருப்தி
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச்சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடு கள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளிப்பதாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அது ஒருமித்த கருத்தொன்று அல்லவெனக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
சர்வதேச விசாரணையொன்றை நாம் கோரிவந்த நிலையில் ஆகக்குறைந்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நிகரானதாகக் கூட அமெரிக்க பிரேரணை அமையவில்லை என்பது கவலை அளிக்கின்றது. இவ்வாறான நிலையில் அப்பிரேரணைணை எவ்வாறு வரவேற்க முடியும் என்றும் அந்தக் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
அமெரிக்க பிரேரணை மற்றும் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோ அம்பை்பின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்களின் கருத்துக்கள் வருமாறு,
த.சித்தார்த்தன்
எந்தவொரு நாடும் தனது நலன்களைத் தாண்டி பிறிதொரு தரப்பினரின் நலன்களுக்காக முழுமையான பங்களிப்பை வழங்குமென நாம் எதிர்பார்க்கமுடியாது. கடந்த ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் முரண்பட்ட நிலையில் இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு எதிரான கடும்போக்கொன்றை கடைப்பிடிப்பதற்காக சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒர் அங்கமாக இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக மனித உரிமை பேரவையில் கடுமையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அது பாதிக்கப்பட்ட தரப்பினரான எமக்கு சாதகமாக அமைந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே நாம் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். நியாயமன நீதியொன்ற தேவை என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல முடிந்தது. அதன் பின்னணியிலேயே தற்போது ஐ.நா அறிக்கையும் வெ ளிடப்பட்டது.
ஆனால் தற்போது மேற்குலகத்திற்கு சாதகமான ஆட்சிமாற்றமொன்று இங்கு ஏற்பட்டுள்ளது. புதிய ஆட்சியாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளார்கள். ஆகவே மேற்குலக நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராக தமது கடும்போக்கை கைவிட்டுள்ளார்கள் என்பதே யதார்த்தமாகும்.
எவ்வாறாயினும் நாம் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேவை என்பதை கைவிடமுடியாது. அதற்காகவே அவர்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அவ்வாறான நிலையில் தற்போது வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் எமக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த சர்ந்தப்பம் காணப்பட்ட போதும் அமெரிக்காவின் பிரேரணையானது அதனை மலினப்படுத்தியுள்ளது என்பது பகிரங்மாகியுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக நாம் அது தொடர்பில் எவ்வாறான முடிவை எடுப்பது என்பது தொடர்பில் கலந்தாலாசித்திருக்க வேண்டும். ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டப்பட்டு இவ்விடயம் தொடர்பாக ஆழமான ஆராயப்பட்டு அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்ட பின்னரே அமெரிக்க பிரேரணை குறித்த அறிவிப்பு இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது எமக்கு கவலையை ஏற்படுத்திய அமெரிக்க பிரேரணைக்கு எடுத்த எடுப்பிலேயே வரவேற்பளிக்கப்பட்டிருக்கின்றமையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
சர்வதேச விசாரணையையொன்றையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தோம். அவ்வாறான நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெ ளியிட்ட அறிக்கையில் பாரிய குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றமென்றை உருவாக்கவேண்டும் என்பதுள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அவ்வாறான நிலையில் அமெரிக்கப் பிரேரணையானது அந்த சிபார்சுகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதனால் தற்போது சுயாதீன விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியொன்று எழுகின்றது. அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ன் அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்ற நிலையில் அதனை வரவேற்பதாக அறிக்கப்படுவதற்கு முன்னதாக பங்காளிக் கட்சிகளுடன் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது எழுந்தமானமாக வரவேற்கும் அறிவிப்பை விடுப்பதானது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயமான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் கடினமான பயணத்தை முற்றாக வலுவிழக்கச் செய்யும் செயற்பாடாகவே அமையும் என்றார்.
சி.சிவாஜிலிங்கம்
இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான மீறல்கள் குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையின் மூலமே நியாயமான நீதியை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் . கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் ஆணைக்குழுக்களை அமைத்தும் வாக்குறுதிகளை வழங்கியும் ஏமாற்றுச் செயற்பாடுகளை முன்னெடுத்தது.
தற்போது புதிய அரசாங்கமும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தின் தலையீட்டை நிராகரித்து உள்ளகப்பொறிமுறையுடாக விசாரணை மேற்கொள்ள முயல்கின்றது. இங்கு இனவழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பது ஐ.நா அறிக்கையில் உள்ளீர்க்கப்படாத போதும் மிலேச்சத்தனமான குற்றங்கள் மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இங்கு எவ்விதமான நீதிப்பொறிமுறைகளும் இல்லாத நிலையில் உள்ளகப் பொறிமுறையூடாக எமக்கான நீதியை எவ்வாறு பெறமுடியும். இதனை அமெரிக்க பிரேரணை வலியுறுத்தியிருப்பதை எவ்வாறு வரவேற்கமுடியும்.
வடகிழக்கு தாயக தமிழர்கள் வடக்கு மாகாணசபை தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றின் போது சர்வதேச விசாரணைக்கே தமது ஆணையை வழங்கியுள்ளார்கள். இன்று அவ்விசாரணையை முழுமையாக மறுதலிக்கும் ஒரு பிரேரணைக்கு எவ்விதமான ஆராய்வுமன்றி எவ்வாறு வரவேற்பளிக்கமுடியும். இது எமது நியாயமான நீதிக்கோரிக்கைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துவதோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதற்கான வாசல்களையும் மூடுவதற்கான செயற்பாடகவே உள்ளது என்றார்.