Breaking News

இன்று கடற்றொழில் அமைச்சரைச் சந்திக்கிறது யாழ். மீனவர்கள் குழு

இலங்கை மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்க ளுக்கும் இடையில் அண்மைய காலங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரை யாழ்ப்பாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இன்று சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்குச் சொந்தமான கடல் பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் சட்ட ரீதியற்ற வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டித்து கடந்த வாரம் யாழ்ப்பாண மீனவர்கள் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்தே இலங்கை கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவைச் சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கான ஏற்பாட்டை யாழ்ப்பாண மீன்பிடிச் சங்கம் மேற்கொண்டுள்ளதாக இதன் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘இந்திய மீனவர்கள் எமக்குச் சொந்தமான கடலில் இழுவிசைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவர்கள் சிறந்த முறையில் மீன்பிடியில் ஈடுபட முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட எமது வாழ்வாதரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தகுந்த தீர்வை முன்வைக்க வேண்டும் எனவும் எமது குடும்பத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் மீன்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்’ என தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரமானது ஏற்கனவே  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இருப்பினும் இந்தப் பிரச்சினையானது இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட முடியும் என இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்திருந்தார்.

இந்நிலையில் தமது பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் எனக் கோரி யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர் சங்கங்களின் 3000 வரையிலான மீனவர்கள் கடந்த வாரம் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பெறுபேறாக குறைந்தது பத்து சங்கங்களைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் நாளை காலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் அமரவீரவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.