அமெரிக்க பிரேரணைக்கு இணை ஆதரவு வழங்கப்படும்! அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணை ஆதரவை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த பிரேரணைக்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை குறித்த அறிக்கையின் கண்டுபிடிப்புக்கள்தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
குறிப்பாக இரண்டு தரப்புக்களிலும் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை முன்வந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
அத்துடன் இலங்கை உண்மையை கண்டறிதல் இழப்பீடு வழங்குதல் நீதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பொறிமுறையை முன்னெடுப்பது குறித்து அளித்துள்ள வாக்குறுதிகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த பொறிமுறை செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கையர்கள் அனைவரும் இதய சுத்தியுடனான நல்லிணக்கத்தை அடைவதற்கு களம் அமையும்.
அந்தவகையில் தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையினால் முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானம் எடுத்துள்ளது. மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு உதவி வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.
கடந்த 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் குறித்த யோசனை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது.