கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தவின் ஆட்சியே காரணம்! ஜே.வி.பி. குற்றச்சாட்டு
கடந்த ராஜபக்ஷ ஆட்சியில் நீதிமன்றத் தின் சுயாதீனம் மீது அதிகாரத்தை செலுத்தியதன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக கலப்பு நீதித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் தலைவரும், எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தற்போது நாட்டில் புதிய அர சாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால் எமது நாட்டுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைக் குழு அறிக்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 'கலப்பு' நீதிமன்றத்தை நிறுவுவதென்பது நாட்டின் அரசியலமைப்புக்கும் ஐ.நா.வுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.
ஜனாதிபதியும், பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டின் அரசியலமை ப்பை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளனர்.எனவே, எந்தவொரு விதத்திலும் அரசியலமைப்பை மீறுவதற்கு எவராலும் முடியாது.இவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு ஏற்படுவதற்கு கடந்தகால ராஜபக்ஷ ஆட்சியே காரணமாகும்.
அவ் ஆட்சியில் நீதிமன்றத்தின் சுயாதீனம் மீது அதிகாரம் செலுத்தப்பட்டதோடு நீதிமன்றத்தை ஆட்சியாளர்களின் கைப்பொம்மையாக ஆட்டுவித்ததன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளை நடத்த கலப்பு நீதிமன்ற யோசனையை பரிந்துரை செய்துள்ளது. தற்போது நாட்டில் புதிய ஆட்சி அதிகாரம் உருவாகியுள்ளது. எனவே எமது நாட்டுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டுமென்றும் அநுர குமார திஸாநா யக்க எம்.பி.தெரிவித்துள்ளார்.