Breaking News

அன்னையர் இட்ட தீ எந்தப் புரத்தையும் இன்னும் எரிக்கவில்லை-சிறப்பு பதிவு

கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது.
வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் வந்திருந்தனர்.
இதனால் அந்த இடம் பிரபலமாகியது. அவ்விடம் பற்றியே இந்தக் கட்டுரை பேசப்போகிறது.
அவ்வாறு சம்பந்தர் ஐயா வந்திறங்கிய இடம் காடும் வீடும் சார்ந்த பகுதி. இடையிடையே காடுகளும், வீடுகளும், தோட்டங்களும் அந்த நிலப்பரப்பை நிரப்பியிருக்கின்றன.  உலங்குவானூர்தியில்  பறந்தபடி பார்த்தபோது இந்தப் புவியியல் அமைப்பை அழகாக அவர் பார்த்திருக்கக்கூடும். அயர்வில் சயனித்திருப்பின் அந்த வாய்ப்பும் கிட்டியிருக்காதுதான். ஆயினும் அவர் வானிலிருந்தாவது சின்னடம்பன் குடிகளைத் தரிசித்திருப்பார் என நம்புவோம்.
இப்படியாகவாவது தங்கள் கிராமத்துக்கு மிகப் பிந்திய மீட்பர் வருவதை பேரதிஸ்டமாகவே கிராமத்தவர்கள் கொண்டாடினார்கள். யாரின் குறையைக் கேட்காவிடினும், தங்கள் கதையைக் கேட்கவாவது பெருந்தலைவன் இறங்கி வருவார் எனப் பிள்ளைகளைத் தொலைத்த அன்னையர்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.
Sinnadampan1
அப்படியாகக் காத்திருந்தவர்களில் ஒருவர்தான் செல்வராசா கவிதா.
ஒருமுறை மட்டும் அவரின் வீட்டுக்கு சென்றால் சரியாக முகவரி நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத ஓரிடத்தில் – அந்தக் கிராமத்தில் அவர் வசிக்கிறார். இரண்டு ஏக்கர்களுக்கு மேற்பட்ட பறட்டை நிலத்தில், சில எலுமிச்சை மரங்களும், சோடையடித்த இரண்டு தென்னைகளும் நிற்கின்றன. மற்றைய இடம் முழுவதும் பற்றை தன்னியல்புக்கு செழித்தும், காய்ந்தும் நிற்கிறது. குச்சொழுங்கைக்கு மிகக் கிட்டிய தூரத்தில் – காணியின் முன்பக்கத்தில் அவரின் குடிசை அமைந்திருக்கிறது. சாதாரண உயரமுடைய ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாதளவுக்கான குட்டிக் குடிசை அது. பனையோலையால் நேர்த்தியாக வேயப்பட்டு, மண்ணால் சுவர் அணையிடப்பட்டிருக்கிறது. தகரத்தினால் கதவு. அதற்குள்தான் கவிதா வசிக்கிறார்.
கவிதா, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் 5 பெண் பிள்ளைகளின் தாய். கணவன் செல்வராசா ஒரு விவசாயி. ஐந்து பிள்ளைகளும் 17 வயதுக்குட்பட்டவர்கள். 2009 இன் மனிதப் பேரவலம் கவிதாவின் குடும்பத்தையும் இடம்விட்டு இடம்மாறச் செய்தது. ஒட்டுசுட்டான், உடையார்கட்டு, இரணைப்பாலை, பொக்கணை, கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் என மாறி மாறி மாறிக்கொண்டிருந்தனர்.
அப்போது வந்த நாளொன்றில்தான் கவிதாவின் மூத்த மகள் காணாமல்போனாள். அயல் பதுங்கு குழிக்குச் சென்ற மகள் சொந்த பகுங்கு குழிக்கு மீளத் திரும்பவேயில்லை. “மூண்டாம் மாசம், மூண்டாம் திகதி, 2009 ஆம் ஆண்டு தான் பிள்ளை காணாமல் போனவள்”. கவிதாவுக்கு ஆணி அறைந்த நினைவாயிருக்க வேண்டும். படார் என்று திகதியைச் சொல்கிறார்.
போர் மழைக்குள்ளும், திக்குத்தெரியாத திசையெல்லாம் மகளைத் தேடிக் களைத்தது குடும்பம். “நான் ஆனந்தபுரத்தில நிக்கிறன். அம்மா அப்பாவ யோசிக்க வேண்டாமெண்டு சொல்லுங்கோ. நான் நல்லாயிருக்கிறன்” –  தேடிக் களைத்து பதுங்கு குழிக்குள் சுருண்ட நாளில் அறிந்தவர் ஒருவர் செய்தி சொன்னார். மகள் உயிரோட இருக்கிறாள் என்ற தெம்பில், மீதிக் காலத்தைக் கடக்கலாயினர்.
கவிதாவின் குடும்பத்துக்கு, இனி இடம்பெயர இடமில்லை என்றொரு நாள் வந்தது. வெள்ளாமுள்ளிவாய்க்காலில் பதுங்கு குழியொன்றில் தஞ்சமடைந்துகொண்டனர்.  13.05.2009 அன்று, காலை 10. 00 மணி. போர் அகோரத்தாண்டவமாடிக்கொண்டிருந்தது.
Sinnadampan2
‘பளிச்’
கவிதா, கணவன், மற்றும் மிரண்டழுத நான்கு பிள்ளைகளையும் அரண்செய்திருந்த பதுங்கு குழியின் தலையிலேயே எறிகணை விழுந்து வெடித்தது. கணவன் செல்வராசா அந்த இடத்திலேயே மரணித்ததை நினைவு கூர்கிறார் கவிதா.
“மிச்ச 2 பிள்ளையளுக்குக் காயம். கடைசி மகள் என்ர இடுப்பில இருந்ததால நானும், அவாவும், மற்ற ஒரு பிள்ளையுமாக 3 பேர் காயப்படாமல் தப்பினம்.
“அங்க ஆஸ்பத்திரியள், மருந்துகள் எதுவுமில்ல. எண்டாலும் ஆஸ்பத்திரி மாதிரி ஒண்டு இயங்கினது. அங்க கொண்டு போனால் துணியால காயத்த கட்டிவிடுவினம். ரத்தம் போறது குறையும். எங்களிட்ட துணியளும் இல்லத்தானே. இரண்டு பிள்ளையளயும் அங்க கொண்டு போனன். ஒரு பிள்ளைக்குத் தலையில பலத்த காயம். 13 ஆம் திகதி பின்னேரமே செத்திட்டா.
“காலையில மனுசன் செத்த, பின்னேரம் பிள்ளை செத்த..
“காயப்பட்டிருந்த மற்ற மகள் இரவிரவா அழுதுகொண்டிருந்தா. காலம அவாவும் செத்திட்டா. என்ர பிள்ளைய அடக்கம் செய்யக்கூட யாருமில்ல. சில பேரோட நானும் பிள்ளையத் தாக்கப் போனன். இடுப்பில கடைசி மகள் இருந்தா. அவாவுக்கு எதுவும் தெரியிற அளவுக்கு விவரம் இல்லை. 4 வயசு.
தாட்டிட்டு, மகள இடுப்பில வச்சிக்கொண்டு பங்கர் பக்கமா ஓடி வந்தன். எங்கேயோ இருந்து வந்த ரவுண்ட்ஸ் என்ர இடுப்பில இருந்த மகளின்ர தலையில பட்டிட்டு. என்ர பிள்ளை என்ரை இடுப்பிலயே செத்து விழுந்தது”.
கவிதாவின் கண்ணீர் அந்தக் கிராமத்தின் வெம்மையைத் தணித்திருக்க வேண்டும். சில மணிநேரங்கள் வரை அவரின் அழுகை நீடித்தது.
காணாமல் போன மகளை விட்டு, கவிதாவும் இன்னொரு மகளும் மட்டுமே வவுனியா நலன்புரி நிலையத்துக்கு வந்தார்கள். காணாமல் போன மகளை வவுனியா தொடக்கம் வெலிக்கடை வரைக்கும் தேடினார் கவிதா. எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போதுதான் பத்திரிகை செய்தியொன்றில், புனர்வாழ்வு பெறும் முன்னாள் பெண் போராளிகள் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் கவிதாவின் மூத்த மகள் நின்றிருந்தாள். அவசரமாக எடுத்துச் சென்று, ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தைக் காவல்செய்த பொலிஸாரிடமும், இராணுவத்தினரிடமும் தன் மகளை அடையாளப்படுத்தினார் கவிதா. பொலிஸார் தாம் அந்தப் புனர்வாழ்வு முகாமில் விசாரித்து சொல்வதாகச் சொல்லித் தறப்பாள் குடிலுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சீஐடி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஐ.சி.ஆர்.சி என அலைந்தார் கவிதா. சில கால இழுத்தடிப்பின் பின்னர் அனைவரும் கைவிரித்தனர்.
அந்தக் கைவிரிப்போடு கவிதாவும், மகளும் சின்னடம்பன் திரும்பினர்.
“யோசிச்சி யோச்சு, அவாவுக்கு மெண்டல் ஆக்கிப்போட்டுது எண்டு ஊர்ச்சனங்கள் கதைக்கத் தொடங்கீற்று. அதால பிள்ளைய அவரின்ர ஆக்கள் கூட்டிக்கொண்டு போயிற்றினம். என்னோட அண்ட விடுறதில்ல. இப்ப தனியத்தான் இருக்கிறன்,” என்று சொல்லி முடித்துக் கூரை, வானம் அதற்கும் மேல் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் பார்க்கிறார் கவிதா. அந்தவெளியில் அவருக்குப் பிடிமானமாக எதுவுமில்லை. துயரக்காலங்களின் வடு அவரின் முழு உடலையும் வியாபித்திருக்கிறது.
“கிட்டடியில பெரிய சண்ட. அவரின்ர சொந்தக் காரர் வந்து என்னைய றோட்டில போட்டு அடிச்சிப் போட்டின. பாலத்துக்க தள்ளவிழுத்தி அடிச்சிற்றினம். வீட்டையும் எரிச்சிப் போட்டினம். பாருங்கோ, என்ர பழைய வீட்ட”.
ஒரு மரத்தின் கீழ் சாம்பல் மேடாய் மிஞ்சிக்கிடக்கிறது கவிதாவின் வீடு.
Sinnadampan4
“வீட்டுத்திட்டம், அரச உதவிகள் எதுவும் கிடைக்கேல்ல. போய் கதைச்சா இப்பா வா அப்ப வா எண்டுவினம். நான் தனியாள் எண்டு வீட்டுத்திட்டம் இல்லையெண்டுட்டினம். இந்த ஒரு லட்ச ரூபா வீடு தந்திருக்கினம். இந்த வெயிலுக்கு அதுக்குள்ள இரவிலயும் இருக்கேலாது, பகலிலயும் இருக்கேலாது. அனல் கொதிக்கும்”.
இதுதான் சின்னடம்பன் வருகை தந்திருந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனை சந்தித்துப் பேச காத்திருந்த கவிதாவின் வாழ்க்கை.
இதில் ஒரு துண்டுக் கதையான தன் மகள் காணாமல் போனமை பற்றியே சம்பந்தனுக்கு முறையிட அந்தக் கூட்டத்துக்குள் கவிதா காத்து நின்றார்.
கூட்டம் முடிந்தது. இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களும் மேடையைவிட்டு இறங்கி வந்தார். எல்லோரும் அவரின் நடையை அழகு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
பிள்ளைகளைத் தொலைத்த தாய்மார் சிலர் சம்பந்தன் ஐயாவை நோக்கி ஓடினர். அவரின் கையைப் பிடிக்க முயற்சித்தபடி, ‘ஐயா..ஐயா..எங்கட பிள்ளையள்…’, ‘ஒரு முடிவு’
“இப்ப ஏன் இஞ்ச வந்தனீங்கள். இப்ப யாரும் இது பற்றிக் கதைக்க வேணாம். என்னை விடுங்கோ, என்னை விடுங்கோ” எனச் சொல்லிக்கொண்டே திடீர் வேகமெடுத்த சம்பந்தன் ஐயா அந்த இடத்தை விட்டே ஓடிப் பறந்தே விட்டார்.
ஏமாற்றம், கவலை, விரக்தி – பேரவமானம் – பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களுக்கு வரிசையாக மிஞ்சியது.
ஆனாலும் அந்தப் பொழுதில் அன்னையர் இட்ட தீ எந்தப் புரத்தையும் இன்னும் எரிக்கவில்லை.