ஆசிய பசுபிக் பிரிவுக்கான ஐ.நா. பிரதானியுடன் தமிழ்த் தரப்பு சந்திப்பு
ஆசிய பசுபிக் பிரிவுக்கான ஐ.நா.பிரதானி ரொரி மொங்கோனுக்கும் தமிழ் தரப்பினருக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தரப்புக்கள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பு குறித்து ஜெனிவாவில் இருந்தவாறு சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றையே நாம் கோரியிருந்தோம். அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் சர்வதேச விசாரணையை தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே ஆணையை வழங்கியிருந்தார்கள். மேலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து வேட்டையின் போது ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமாக கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடைபயணங்கள் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களைக் கொண்ட கலப்பு விசேட நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்று விசேடமாக குறிப்பிட்டதோடு பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பகாவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
எனினும் தற்போது அமெரிக்க அணுசரணையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் கலப்பு விசேட நீதிமன்ற பொறிமுறை உட்பட ஆறு பந்திகள் நீக்கப்பட்டுள்ளன. முக்கிய குற்றங்கள், இராணுவ வெளியேற்றம் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விசாரணையை முன்னெடுப்பதற்கான வரபிரசாதங்கள் அதிகமாக இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வடக்கில் பத்து இலட்சம் மக்கள் ஒன்றரை இலட்சத்தற்கும் அதிகமான இராணுவத்தினருக்கு மத்தியில் சுதந்திரமின்றி அன்றாட வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.
போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கையின் நீதித்துறையில் சட்டங்கள் காணப்படவில்லை. அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதற்கான சட்டமூலங்களும் தயாரிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் நீதி விசாரணை என்பது எவ்வாறு சாத்தியமாகும்.? அதேபோன்று சட்சியங்களை பாதுகாப்பதற்கான எந்தவிதமான பொறிமுறைகளும், நீதிச் சட்டங்களும் காணப்படவில்லை. ஆகவே சாட்சியாளர்கள் எவ்வாறு முன்வந்து சாட்சியமளிப்பார்கள் என்பது கேள்குறியதாகும்.
மேலும் விடுதலைப் புலிகள் தரப்பினரையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளையும் விசாரணை செய்யவேண்டும், யாரை விசாரிப்பது போன்ற கேள்விகள் வாதங்களை முன்வைத்தே விசாரணைகளை காலந்தாழ்த்தி ஏமாற்றுவதற்கான காரணமாக பயன்படுத்தி வந்தது. அவ்வறான நிலையில் மீண்டும் விடுதலைப்புலிகளை விசாரணைக்குட்படுத்துமாறு கோரப்படுகின்றமையானது அரசாங்கம் தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை முன்னெடுக்காது காலந்தாழ்த்துவதை நியாயப்படுத்துவதற்கே வழிவகுக்கும்.
அதேவேளை இறுதிக்கட்டப்போரின் இறுதித்தருணங்களில் சரணடைந்த கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை அரசாங்கம் விசாணைக்குட்படுத்தியதுடன் சிறைகளிற்கும் புனர்வாழ்வு நிலையங்களிற்கும் அனுப்பியது. அவ்வாறிருக்கையில் ஏற்கனவே விசாரணை நிறைவுற்று புனர்வாழ்வு பெற்றும், தண்டனை பெற்றுமுள்ள விடுதலைப் புலிகளை மீண்டும் விசாரணைக்குட்படுத்துவது ஒரு குற்றவாளிக்கு இரண்டு தடவைகள் தண்டணையளிப்பது போன்றதாகும்.
மேலும் வெற்றி வீரர்களாக தென்னிலங்கையில் கூறப்படும் இராணுவத்தினரை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்துவதற்கும், குற்றங்களோடு தொடர்பு பட்ட அரசியல் பிரதிநிதிகளை விசாரணைக்குட்படுத்துவதற்கும் பலத்த அழுத்தங்கள் நிச்சயம் பிரயோகிக்கப்படும். அவ்வாறான நிலையில் சுயாதீன விசாரணையொன்றை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்த வரலாறே காணப்படுகின்றன.
எனவே இவ்வாறான நிலைமைக்குள் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். ஆகவே இவ்விடயங்கள் தொடர்பாக தாங்கள் அதீத கவனம் செலுத்தவேண்டுமென கோரினோம் என்றார்.