ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ள கூட்டமைப்பு பிரமுகர்கள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கியமான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற, மாகாணசபை, உறுப்பினர்கள் ஜெனிவாவில் குவிந்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதாக அதிகாரபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்காத போதிலும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பித்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் ஜெனிவாவுக்கு சென்றிருந்தனர். அதையடுத்து, மேலும் பலர் ஜெனிவாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இன்று இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மாவை சேனாதிராசா, சிறிதரன், வியாழேந்திரன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்னோல்ட் பலரும் ஜெனிவாவில் தங்கியுள்ளனர்.
இவர்கள், ஜெனிவாவில் நடக்கும் உப-குழுக் கூட்டங்களில் பங்கேற்று வருவதுடன் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, பேச்சுக்களை நடத்தியும் வருகின்றனர்.