அமெரிக்கப் பிரேரணைக்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றமையை எதிர்க்கிறோம்
சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்வதனால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வை காணமுடியும். ஆனால் இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகமோசமானதாக அமைந்துவிடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
அமெரிக்க தீர்மான வரைபுக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பது மோசமானதொரு செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகள் முன்வைத்துள்ள தீர்மான வரைபுக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்து தெரிவிக்கும்போதே அக் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் கையாளும் முறைமையில் தெளிவு இல்லை. அரசாங்கம் நாட்டை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் எமக்கு தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை கைப்பற்ற முயற்சிக்கின்றன. வடக்கின் பிரச்சினையை அடிப்படையாக வைத்து முழு நாட்டையும் தமது தளமாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது. அதற்காகவே இவ்வாறான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
அதேபோல் இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கையில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறைகளை பயன்படுத்த முன்னைய அரசாங்கம் விரும்பவில்லை. அதேபோல் பிரச்சினைகளை தீர்க்கவும் எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை. யுத்தம் முடிவடைந்தவுடன் வடக்கில் மக்களின் சாதாராண வாழ்க்கையை உறுதிப்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மோசமானதாக மாறியிருக்காது. காணாமல் போனவர்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், காணிப் பிரச்சினைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காணவேண்டும் என்பதுமே வடக்கு மக்களின் பிரதான பிரச்சினையாக அமைந்தது.
யுத்தம் முடிவடைந்தவுடன் வடக்கில் மக்களை முகாம்களில் முடக்கியமை. இராணுவ கட்டுப்பாட்டின் கீழும் வைத்திருந்தமை, சர்வதேச தரப்பினரிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி யமை ஆகியவற்றினால் இறுதியில் சர்வதேச கட்டுப்பாட்டை ஏற்கவேண்டிய ஒரு நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டது. அவ்வாறான நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும் நாட்டில் சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்தவுமே இந்த அரசாங்கம் ஆட்சியமைப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்த ஆட்சியிலும் நிலைமைகள் மோசமானதாகவே அமைந்துள்ளன.
நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் எழும்நிலையில் அதனை முழுமையாக தடுக்க முடிவுகளை எடுக்காது தற்காலிக தீர்வை காண முயற்சிப்பதன காரணமாகவே இவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹிந்தவும் அவ்வாறான வழிமுறைகளை கையாள முயற்சித்ததன் காரணத்தினாலேயே இலங்கை இராணுவத்தை காவுகொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல் இப்போதும் தற்காலிக தீர்வை காண சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்காது சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். எனினும் இப்போது இலங்கை அரசாங்கம் அமெரிக்க தீர்மான வரைபுக்கு இணை அனுசரணை வழங்க எடுத்துள்ள முடிவை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். ஏனெனில் இந்த தீர்மானம் நாட்டுக்கு மோசமானதொரு விளைவை ஏற்படுத்தும் என்றார்.