ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி
தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.
ஐ.நா பொதுச் சபையின் 70ஆவது கூட்டத்தொடரில் , உலகின் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவதற்கு நாளை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு இணை நிகழ்வாக நடந்த நிலையான அபிவிருத்தி பற்றிய உச்சி மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், உலகின் 198 நாடுகளில், 150 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றினார்.
அதேவேளை, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா அளிக்கவுள்ள இராப்போசன விருந்திலும், மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.