தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதி தீப்பற்றவில்லை : நிபுணர்கள்
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றவில்லையென, இலங்கை மோட்டார் போக்குவரத்துச் சபையின் தொழிநுட்ப பிரிவு ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.ஜயவீர நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
வஸீம் தாஜூதீனின் டொயொட்டா ரக வாகனம் மதிலில் மோதுண்டு தீப்பற்றியதிலேயே, அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, டொயொட்டா நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் டபிள்யூ.எல்.பெரேரா, மேலதிக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க மற்றும் உதவி அரச இரசாயன பகுப்பாய்வாளர் டபிள்யூ.எம்.எல்.ஜயமான்ன ஆகியோர் வாகனத்தை பரீட்சித்து நடத்திய விசாரணையில், விபத்தால் மரணம் சம்பவிக்கவில்லையென கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வாகனம் மோதுண்ட பகுதிகளை வைத்து பார்க்கும்போது, வாகன சாரதி இருக்கையில் அந்தளவு சேதம் ஏற்பட வாய்ப்பில்லையென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனத்தின் சில பகுதிகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு நாரஹெண்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாஜூதீன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அது ஒரு கொலையென ஊர்ஜிதமாகியுள்ளது.
அண்மையில் அவரது உடலமும் தோண்டியெடுக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதுகுறித்த அறிக்கையை இரசாயன பகுப்பாய்வாளர்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளனர். குறித்த ஆய்வின்போது, தாஜூதீனின் உடல் பாகங்கள் சில மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.