அரசாங்கமும், கூட்டமைப்பும் உரிமைகளை சர்வதேசத்திடம் பேரம்பேசுகின்றன - தினேஷ் குற்றச்சாட்டு
ஜனாதிபதி சர்வதேச விசாரணையையும் பிரதமர் உள்ளக விசாரணையையும் வலியுறுத்தி கருத்துக்களை வெளிப்படுத்துவதால் எது உண்மையானது என மக்கள் குழம்பியுள்ளனர். சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா இலங்கையில் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக ஜனாதிபதியும் சர்வதேச தலையீடற்ற உள்ளக பொறிமுறையை நடத்துவதாக பிரதமரும் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் உறுதியளித்துள்ளார். அதேபோல் இலங்கை மீதான அழுத்தங்களை குறைக்க அமெரிக்காவின் பரிந்துரையை நிறைவேற்றுவதாகவும் ஜெனிவா சென்றுள்ள அரச தரப்பினர் உறுதியளித்துள்ளனர். ஆனால் இலங்கையில் ஊடகங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள கோரிக்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும்
பொதுத் தேர்தலின் பின்னரும் இந்த நாட் டில் தேசிய அரசாங்கங்கள் அமைந்தன. இதில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை அமைத்துள்ளனர். அதேபோல் இன்று சர்வதேச விசாரணையை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த கூட்டணியின் பங்குதாரராக செயற்பட்டன. அவ்வாறான நிலையில் இன்று ஒவ்வொருவரும் தத்தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேசிய அரசாங்கம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் ஆட்சியை மேற்கொள்வதாக கூறுகின்றது. அவ்வாறு மிக நீண்டகாலம் இந்த நாட்டில் ஆட்சியை மேற்கொள்ளும் இவர்களிடம் ஒரு தெளிவான தீர்மானம் இல்லாவிடின் இந்த நாடு மிகவும் மோசமான வகையில் ஆக்கிரமிக்கப்படும். ஆகவே, இந்த நாட்டில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படுமா அல்லது உள்ளக விசாரணைகளை மேற்கொள்வார்களா என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இவர்களை நம்பி வாக்குகளை வழங்கியமைக்கு இந்த அரசாங்கம் எந்தளவு உண்மையாக உள்ளது என்பதை இவர்கள் வெளிப்படுத்தியாக வேண்டும்.
அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நாட்டு மக்களின் உரிமைகளை சர்வதேச தரப்பிடம் பேரம்பேசும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எமது இராணுவ வீரர்களையும் நாட்டையும் காவுகொடுக்கும் வகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. அதேபோல் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தி நாட்டில் தனி மாநிலத்தை உருவாக்கும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. ஆகவே இவை அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் நாட்டில் உண்மை யான நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்றார்.