போர்க் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளும் பொறுப்பு கூற வேண்டும் - பிரதமர் ரணில்
இறுதிக் கட்டப்போரிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொறுப்புகூற வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
இவற்றுக்கு வெறுமனே ஸ்ரீலங்கா படையினரை மட்டும் குற்றம் சாட்டுவது பக்கச்சார்பான செயல் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு பிலிப் குணவர்தன விளையாட்டரங்கை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
கடந்த காலங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கும், இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவருமே பொறுப்பு கூற வேண்டும்.வெறுமனே இவற்றுக்கு ஸ்ரீலங்கா படையினரை குற்றம் சாட்டுவது பக்கச்சார்பான செயற்பாடாகும்.
போர்க் குற்ற நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டால் ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சம் காணப்பட்டது. ஆனால் அந்த அச்ச நிலையை நாம் போக்கியுள்ளோம் – என்றார்.